டவ்தே புயல்: குஜராத், மராட்டிய முதல் மந்திரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்திய மத்திய மந்திரி அமித்ஷா


டவ்தே புயல்:  குஜராத், மராட்டிய முதல் மந்திரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்திய மத்திய மந்திரி அமித்ஷா
x
தினத்தந்தி 16 May 2021 12:10 PM GMT (Updated: 16 May 2021 12:10 PM GMT)

டவ்தே புயலை முன்னிட்டு குஜராத், மராட்டிய மாநில முதல் மந்திரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆய்வு கூட்டம் நடத்தினார்.

புதுடெல்லி,

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கடந்த 15ந்தேதி டவ்தே புயலாக மாறியது.

இந்த புயல் வடக்கு திசை நோக்கி நகரத்தொடங்கி, கோவா கடல் பகுதியில் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்றது. கோவாவிற்கு தென்மேற்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தெற்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டிருந்த புயல், தொடர்ந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. 

அதே திசையில் பயணிக்கும் புயல் நாளை, மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து மேற்கே அரபிக்கடலில் நிலை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.  புயல் நாளை மறுநாள் (18ந்தேதி) அதிகாலையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் மகுவா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூறாவளி புயலால், மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 150 முதல் 160 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.  காற்று சுழன்றடிக்கும்.  கனமழையும் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கடந்த 3 நாட்களாக கேரளா முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்பால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளா முழுவதும் வரும் 17ந்தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால், திருவனந்தபுரம், எர்ணாகுளம் உட்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பணிகளுக்காக பேரிடர் நிவாரண படையினர், கடற்படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

கர்நாடகாவில் டவ்-தே புயலால் இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.  6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 73 கிராமங்கள் பாதிப்படைந்து உள்ளன.

புயலை முன்னிட்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குஜராத் மற்றும் மராட்டிய மாநில முதல் மந்திரிகளுடனும் மற்றும் டாமன் டையூ, தாத்ரா நாகர் ஹாவேலி ஆகியவற்றின் நிர்வாகத்தினரிடமும் ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.


Next Story