50 ஆயிரம் படங்கள் மூலம் நிலவின் துல்லிய படத்தை உருவாக்கி புனே சிறுவன் சாதனை


50 ஆயிரம் படங்கள் மூலம் நிலவின் துல்லிய படத்தை உருவாக்கி புனே சிறுவன் சாதனை
x
தினத்தந்தி 21 May 2021 12:36 AM GMT (Updated: 21 May 2021 12:36 AM GMT)

புனேயை சேர்ந்த சிறுவன் ஒருவன் 50 ஆயிரம் படங்கள் மூலம் நிலவின் துல்லியமான படத்தை உருவாக்கி சாதனை படைத்து உள்ளான்.

மும்பை,

புனேைய சேர்ந்த 16 வயது சிறுவன் பிராதமேஷ் ஜாஜூ. இவன் புனேயில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவனுக்கு வானியல் ஆராய்ச்சியில் அதீத ஆர்வம். எனவே அவன் புனேயில் உள்ள வானியல் ஆராய்ச்சி கிளப்பில் வானியல் புகைப்பட கலையை கடந்த சில ஆண்டுகளாக கற்று வருகிறான்.

இந்தநிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 10-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் கிடைத்த நேரத்தை பயன்படுத்தி கொண்ட அவன், பூமியின் துணைக்கோளான நிலவை துல்லியமாக படமெடுத்து சாதனை படைத்து உள்ளான். இதற்காக சிறுவன் சுமார் 5 மணி நேரம் டெலஸ்கோப், கேமராவை பயன்படுத்தி பல்வேறு கோணங்களில் நிலவை படம் எடுத்தான். பின்னர் அந்த படங்களை 40 மணி நேரம் மென்பொருள் தொழில் நுட்பம் மூலம் கோர்த்து துல்லியமான, தெளிவான முப்பரிமாண நிலவின் படத்தை உருவாக்கி சாதனை படைத்து உள்ளான்.

துல்லியமான தோற்றத்திற்காக நிலவை சுமார் 50 ஆயிரம் படங்கள் எடுத்ததாக சிறுவன் பிராதமேஷ் ஜாஜூ கூறியுள்ளான்.

இதுகுறித்து அவன் விவரித்து கூறியதாவது:-

நான் நிலவை சுமார் 38 வீடியோக்கள் எடுத்தேன். ஒவ்வொரு வீடிேயாவும் 1 நிமிடம் நீளம் இருக்கும். இதில் ஒரு வீடியோவில் இருந்து எனக்கு 2 ஆயிரம் படங்கள் கிடைத்தன. இதில் 38 விதமான கோணங்களில் எடுக்கப்பட்ட 38 வீடியோவில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களை தேர்வு செய்தேன். இவற்றை தொகுத்து தான் முழு நிலவின் தெளிவான படத்தை உருவாக்கினேன். இந்த படத்தை ஒருவர் எவ்வளவு பெரிதாக்கி (சூம்) பார்த்தாலும் நிலவின் பகுதி தெளிவாக தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story