பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் செயல்படாமல் போனது தீவிர பிரச்சினை; மும்பை ஐகோர்ட்டு கருத்து


பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் செயல்படாமல் போனது தீவிர பிரச்சினை; மும்பை ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 26 May 2021 12:24 AM GMT (Updated: 26 May 2021 12:24 AM GMT)

பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் செயல்படாமல் போனது தீவிரமான பிரச்சினை என மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

செயல்படாத வெண்டிலேட்டர்கள்
பிரதம மந்திரி நிவாரண நிதியில் வாங்கப்பட்ட 150 வென்டிலேட்டர்கள் சமீபத்தில் அவுரங்காபாத் அரசு மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டது. இந்த வெண்டிலேட்டர்களில் பல செயல்படாமல் இருந்தது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டு அவுரங்காபாத் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.வி. குகே, பி.யு. தேபாத்வார் அடங்கிய அமர்வு முன் நடந்தது.இதில் அரசு தரப்பு தலைமை வக்கீல் டி.ஆர். காலே, ‘‘மத்திய அரசு வழங்கிய 150 வெண்டிலேட்டர்களில் 17-ஐ அவுரங்காபாத் அரசு ஆஸ்பத்திரி பயன்படுத்தி கொண்டது. 41 வெண்டிலேட்டர் 5 தனியார் 
ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்பட்டன. 55 மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன.37 வெண்டிலேட்டர்கள் பயன்படுத்தாமல் வைக்கப்பட்டு இருந்தது. இதில் 113 வெண்டிலேட்டர்கள் பழுதாகி இருந்தது தெரியவந்தது. இது கொரோனா நோயாளிகள் சிகிச்சையை பாதித்தது’’ என்றார்.

தீவிரமான பிரச்சினை
இதையடுத்து நீதிபதி, ‘‘பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் செயல்படாமல் போனதால் நடந்த நிகழ்வுகள் மூலம் அது தீவிரமான பிரச்சினை என்பதை அறிகிறோம். மத்திய அரசு வெண்டிலேட்டர்கள் கொடுத்ததை பாராட்டுகிறோம். ஆனால் அவை சுகாதார ஆபத்து, தொய்வை ஏற்படுத்தினால் அதை பயன்படுத்த முடியாது. நீங்கள் (அவுரங்காபாத் மாவட்ட நிர்வாகம்) அரசுக்கு கடிதம் எழுதிவிட்டு அந்த வெண்டிலேட்டர்களை திருப்பி அனுப்புவது நல்லது’’ என்றார்.மேலும் அவர் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, எடுக்கப்பட்ட தீர்வு நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் மனு மீதான விசாரணையை வரும் 28-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story