அண்டை நாடுகளை சேர்ந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க 13 மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம்; மத்திய அரசு நடவடிக்கை


அண்டை நாடுகளை சேர்ந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க 13 மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம்; மத்திய அரசு நடவடிக்கை
x
தினத்தந்தி 29 May 2021 6:26 PM GMT (Updated: 29 May 2021 6:26 PM GMT)

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அண்டை நாடுகளை சேர்ந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையின அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க மேலும் 13 மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் அளித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

முஸ்லிம் அல்லாதவர்கள்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் சிறுபான்மையினராக வசித்து வரும் ஏராளாமானோர் கடந்த பல ஆண்டுகளில் அகதிகளாக இந்தியாவில் வந்து வசித்து வருகின்றனர். இதில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக குடியுரிமை திருத்த சட்டம் ஒன்றையும் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தது. அத்துடன் கொரோனா தொற்றும் நாடு முழுவதும் பரவத்தொடங்கியது.எனவே இந்த சட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த சட்டம் உறுதியாக அமல்படுத்தப்படும் என மத்திய அரசு கூறி வருகிறது.

குடியுரிமை சட்டம்-1955

ஆனால் இந்த சட்டம் அமலாக்குவதற்கு முன்னரே மேற்படி சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்திய குடியுரிமை சட்டம் 1955-ன்படியே இந்த நடவடிக்கைகளை அரசு தொடங்கி உள்ளது.அதன்படி மேற்படி அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு மேலும் 13 மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அரசாணையில், ‘குடியுரிமை சட்டம் 1955 பிரிவு 16-ன்படி (1955-ல் 57), பிரிவு 5-ன்கீழ் ஒருவரை இந்திய குடிமகனாக பதிவு செய்யவோ அல்லது 6-ன்கீழ் இயற்கைமயமாக்கல் சான்று வழங்கவோ மாவட்ட கலெக்டர்களுக்கு மத்திய அரசு இதன் மூலம் அதிகாரம் வழங்கி அறிவுறுத்துகிறது’ என்று குறிப்பிட்டு இருந்தது.

13 மாவட்ட கலெக்டர்கள்

அதன்படி மோர்பி, ராஜ்கோட், படான், வதோதரா (குஜராத்), துர்க் மற்றும் பலோடபசார் (சத்தீஷ்கார்), ஜலோர், உதய்பூர், பாலி, பார்மர் மற்றும் சிரோகி (ராஜஸ்தான்), பரிதாபாத் (அரியானா), ஜலந்தர் (பஞ்சாப்) ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் அரியானா, பஞ்சாப் மாநில உள்துறை செயலாளர்களுக்கும் மேற்படி அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.இந்த சட்டத்தின்கீழ் ஏற்கனவே 16 மாவட்ட கலெக்டர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு அதிகாரம் வழங்கி இருந்தது. தற்போது மேலும் 13 மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் மொத்தம் 29 மாவட்ட கலெக்டர்கள் அதிகாரம் பெற்றுள்ளனர்.இந்த நடவடிக்கையில், மேற்படி அகதிகளை இந்திய குடிமக்களாக ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் இந்த விவரங்களை 7 நாட்களுக்குள் மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இது குடியுரிமை திருத்த சட்டத்தை புறவாசல் வழியாக அமல்படுத்தும் செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது.

இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது டுவிட்டர் தளத்தில், ‘சூழ்ச்சி. குடியுரிமை திருத்த சட்டம் 2019-ன் விதிகள் இன்னும் வகுக்கவில்லை. இதை அமல்படுத்துவது குறித்த அரசாணையை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. இந்த சட்டத்துக்கு எதிரான புகார்கள் இன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு இதை சரியாக கையாண்டு இந்த புறவாசல் வழியான அமலாக்கத்தை தடுத்து நிறுத்தும் என நம்புவோம்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதைப்போல இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜாவும் மத்திய அரசின் இந்த செயலை கண்டித்துள்ளார். இது, மத்திய அரசின் பாசிசத்தை முற்றிலும் அம்பலப்படுத்தி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 


Next Story