கொரோனா தடுப்பூசி: ஜூன் மாதத்தில் 12 கோடி டோஸ்கள் கிடைக்கும்; மத்திய சுகாதார அமைச்சகம்


கொரோனா தடுப்பூசி:  ஜூன் மாதத்தில் 12 கோடி டோஸ்கள் கிடைக்கும்; மத்திய சுகாதார அமைச்சகம்
x
தினத்தந்தி 30 May 2021 6:26 AM GMT (Updated: 30 May 2021 6:26 AM GMT)

தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு வருகிற ஜூன் மாதத்தில் 12 கோடி டோஸ்கள் கிடைக்க பெறும் என மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் தடுப்பூசிகள் போடும் பணி நடந்து வருகிறது.  கடந்த 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் போட அரசின் அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.  இவற்றை மத்திய அரசு இலவச அடிப்படையில் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது.  இந்த நிலையில், மாநில அளவில் அதிக கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ள மாநிலங்களின் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

இதன்படி, உத்தர பிரதேசத்தில் அதிக அளவாக 30 லட்சத்து 97 ஆயிரத்து 908 தடுப்பூசி குப்பிகள் உள்ளன.  இதன் தொடர்ச்சியாக மத்திய பிரதேசத்தில் 14 லட்சத்து 12 ஆயிரத்து 586, குஜராத்தில் 12 லட்சத்து 72 ஆயிரத்து 908, சத்தீஸ்கரில் 12 லட்சத்து ஆயிரத்து 251 தடுப்பூசி குப்பிகள் கையிருப்பில் உள்ளன.

தமிழகத்தில் 9 லட்சத்து 65 ஆயிரத்து 999 தடுப்பூசி குப்பிகள் உள்ளன.  இதேபோன்று, ஜார்க்கண்டில் 9 லட்சத்து 20 ஆயிரத்து 927, கேரளாவில் 9 லட்சத்து 8 ஆயிரத்து 436, ராஜஸ்தானில் 9 லட்சத்து 119, தெலங்கானாவில் 8 லட்சத்து 86 ஆயிரத்து 126, மேற்கு வங்கத்தில் 8 லட்சத்து 57 ஆயிரத்து 938 கொரோனா தடுப்பூசி குப்பிகள் கையிருப்பில் உள்ளன என்று தெரிவித்தது.

இந்நிலையில், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு வருகிற ஜூன் மாதத்தில் 12 கோடி டோஸ்கள் வரை கிடைக்க பெறும் என மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.


Next Story