தடுப்பூசியை ரூ.600 லாபத்திற்கு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு விற்பதாக பஞ்சாப் அரசு மீது குற்றச்சாட்டு


தடுப்பூசியை ரூ.600 லாபத்திற்கு  தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு  விற்பதாக பஞ்சாப் அரசு மீது குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Jun 2021 11:39 AM GMT (Updated: 4 Jun 2021 11:39 AM GMT)

கோவேக்சின் தடுப்பூசிய ரூ.400 க்கு வாங்கி தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ரூ 1000க்கு மேல் விற்பதாக பஞ்சாப் அரசு மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

புதுடெல்லி: 

கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதில் பல மாநிலங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக மத்திய அரசை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி , பொதுச்செயலர் பிரியங்கா காந்தி  உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மொகாலியில் நிருபர்களை சந்தித்த சிரோன்மணி அகாலிதளம் கட்சி தலைவர் சுக்பிர் பாதல் கூறும் போது:-

பஞ்சாப் அரசு கோவாக்சின் தடுப்பூசியை ஒரு டோஸ் ரூ.400 என கொள்முதல் செய்து, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,060க்கு விற்பனை செய்கிறது. இதன் மூலம் மாநில அரசுக்கு ரூ.660 லாபம் கிடைக்கிறது. இவ்வாறு மாநில அரசு, ஒரு நாளைக்கு 35 ஆயிரம் டோஸ் தடுப்பூசியை விற்பனை செய்து ரூ.2 கோடி வருமானம் பார்த்து உள்ளது. 

தனியார் மருத்துவமனைகள், ஒரு டோஸ் தடுப்பூசி போட ரூ.1,560 வசூல் செய்கின்றன. இதனால், ஒரு குடும்பத்தினர் ஒரு டோஸ் தடுப்பூசி போட ரூ.6 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் செலவாகிறது. காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கை முறையற்றது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில சுகாதார மந்திரி மீது வழக்குப்பதிவு செய்து,ஐகோர்ட்டில்  மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறினார்.

இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து கூறுகையில், தடுப்பூசி குறித்த கட்டுப்பாடு தன்னிடம் இல்லை. சிகிச்சை, ஆய்வு , கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் ஆகியவற்றை மட்டுமே நான் கவனித்து வருகிறேன். தடுப்பூசி விற்பனை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:- 

 ராகுல் காந்தி  மற்றவர்களுக்கு பாடம் நடத்துவதை விட்டுவிட்டு, அவரது கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தை கவனிக்க வேண்டும். பஞ்சாப் அரசுக்கு ஒரு டோஸ் 400 வீதம் 1.40 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் அந்த மருந்தினை 20 தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்துள்ளது'' என தெரிவித்தார்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறும்போது, மத்திய அரசு, மாநில அரசுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும்போது, தனி நபர், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த ஏன் ரூ.3,120 செலுத்த வேண்டும். தடுப்பூசி பற்றாக்குறை குறித்து காங்கிரஸ் அரசு தவறான தகவலை பரப்புகிறது எனக்கூறினார்.

Next Story