நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிப்பு - ஐ.சி.எம்.ஆர் தகவல்


நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிப்பு - ஐ.சி.எம்.ஆர் தகவல்
x
தினத்தந்தி 17 Jun 2021 1:52 PM GMT (Updated: 17 Jun 2021 1:52 PM GMT)

கொரோனா 2-வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா 2-வது அலை காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கொரோனாவின் 2-வது அலை மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 8-ம் தேதி முதல் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது.

அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 67 ஆயிரத்து 208 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 97 லட்சத்து 313 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டில் கொரோனா 2வது அலையில் இதுவரை 387 கர்ப்பிணிகளுக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதில் 111 கர்ப்பிணி பெண்களுக்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது.

முதல் அலை காலகட்டத்தில் 1,143 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், இவர்களில் 162 பெண்களுக்கு மட்டுமே தொற்று அறிகுறிகள் அதிகம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், முதல் அலையில் கர்ப்பிணி பெண்களின் இறப்பு சதவீதம் 0.7 ஆக இருந்ததாகவும், 2வது அலையில் இறப்பு சதவிகிதம் 5.7 ஆக பதிவாகி உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

Next Story