81 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்துக்கு கீழே வந்தது பலி 1,576 ஆக சரிவு


81 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்துக்கு கீழே வந்தது பலி 1,576 ஆக சரிவு
x
தினத்தந்தி 21 Jun 2021 1:17 AM GMT (Updated: 2021-06-21T06:47:24+05:30)

இந்தியாவில் 81 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்துக்கும் கீழே வந்து விட்டது. கொரோனாவால் ஏற்படும் உயிர்ப்பலியும் 1,576 ஆக சரிந்துள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை கொஞ்சம் கொஞ்சமாய் ஓய்ந்து கொண்டிருக்கிறது. அதன் தீவிரம் முற்றிலுமாய் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்துக்கு கீழே வந்து இருக்கிறது. சரியாக 58 ஆயிரத்து 419 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. 81 நாட்களுக்கு பிறகு இது மிகக்குறைந்த பாதி்ப்பு ஆகும்.

இதுவரை பாதிப்புக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை என்பது 2 கோடியே 98 லட்சத்து 81 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் நாடு முழுவதும் 18 லட்சத்து 11 ஆயிரத்து 446 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், அதன் பாதிப்பு விகிதம் 3.22 சதவீதமாக குறைந்துள்ளது. தொடர்ந்து 13-வது நாளாக பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்கு கீழாக பதிவாகி உள்ளது. இதே போன்று வாராந்திர பாதிப்பும் 3.43 சதவீதமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கொரோனாவின் 2-வது அலை வீழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதெல்லாம் சாதகமான அறிகுறிகளாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் நாள்தோறும் குறைந்து கொண்டே இருக்கின்றன. நேற்று முன்தினம் 1,647 பேர் பலியாகினர். நேற்று இது 1,576 ஆக குறைந்துள்ளது.

63 நாளில் இதுவே மிகக்குறைந்த எண்ணிக்கையிலான உயிர்ப்பலி ஆகும்.

இதுவரை நாட்டில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 713 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

கொரோனா இறப்பு விகிதம் என்பது தொடர்ந்து 1.29 சதவீதமாக நீடிக்கிறது.

நேற்று அதிகபட்ச எண்ணிக்கையாக மராட்டிய மாநிலத்தில் 682 பேர் இறந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 180 பேரும், கர்நாடகத்தில் 161 பேரும், கேரளாவில் 115 பேரும் பலியாகி உள்ளனர்.

நேற்று அந்தமான் நிகோபார், அருணாசலபிரதேசம், தத்ரா நகர்ஹவேலி டாமன் டையு ஆகியவற்றில் ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை.

38-வது நாளாக நேற்றும் தினசரி பாதிப்பை விட கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 58 ஆயிரத்து 419 பேர் கொரோனாவால் நேற்று பாதிக்கப்பட்ட நிலையில், 87 ஆயிரத்து 619 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டு வெற்றிகரமாக வீடு திரும்பினர்.

இதுவரை இந்தியாவில் 2 கோடியே 87 லட்சத்து 66 ஆயிரத்து 9 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். கொரோனா மீட்பு விகிதமும் 96.27 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாக தமிழ்நாட்டில் நேற்று 18 ஆயிரத்து 232 பேர் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த எண்ணிக்கையில் நேற்று 30 ஆயிரத்து 776 குறைந்தது. காலை 8 மணி நிலவரப்படி நாட்டில் 7 லட்சத்து 29 ஆயிரத்து 243 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 2.44 சதவீதம் ஆகும்.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


Next Story