பா.ஜனதா எம்.எல்.ஏ. தொடர்ந்த அவதூறு வழக்கு குஜராத் கோர்ட்டில் ராகுல்காந்தி ஆஜர்


பா.ஜனதா எம்.எல்.ஏ. தொடர்ந்த அவதூறு வழக்கு குஜராத் கோர்ட்டில் ராகுல்காந்தி ஆஜர்
x
தினத்தந்தி 24 Jun 2021 6:55 PM GMT (Updated: 2021-06-25T00:25:58+05:30)

பா.ஜனதா எம்.எல்.ஏ. தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக குஜராத் கோர்ட்டில் ராகுல்காந்தி ஆஜரானார். ‘மோடி’ என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று சொல்லவில்லை என்று அவர் வாக்குமூலம் அளித்தார்.

சூரத்,

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அந்த ஆண்டு ஏப்ரல் 13-ந்தேதி அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி, கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அதில், பிரதமர் மோடி, நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை பற்றி பேசினார்.

அவரது பேச்சுக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி, சூரத் கோர்ட்டில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:-

கோலார் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, ‘‘எப்படி எல்லா திருடர்களும் ‘மோடி’ என்ற ஒரே துணைப்பெயர் வைத்திருக்கிறார்கள்? என்று கேட்டார். இதன்மூலம் ஒட்டுமொத்த மோடி சமுதாயத்தையும் அவர் இழிவுபடுத்தி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சூரத் கோர்ட்டில் ராகுல்காந்தி ஆஜரானார். தான் குற்றவாளி அல்ல என்று கூறினார்.

நிலுவையில் இருந்து வரும் இவ்வழக்கில், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, 24-ந்தேதி (நேற்று) கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு ராகுல்காந்திக்கு மாஜிஸ்திரேட்டு சமீபத்தில் உத்தரவிட்டார்.

அதன்படி, சூரத் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ஏ.என்.டாவே முன்னிலையில் ராகுல்காந்தி நேற்று ஆஜரானார். ‘‘மோடி பெயர் வைத்திருப்பவர்கள் எல்லோரும் திருடர்கள் என்று சொன்னீர்களா?’’ என்று மாஜிஸ்திரேட்டு கேட்டதற்கு ராகுல்காந்தி ‘‘அப்படிப்பட்ட அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை’’ என்று மறுப்பு தெரிவித்தார்.

‘‘பிரதமர் மோடி ஒரு தொழிலதிபருக்கு ரூ.30 கோடி கொடுத்ததாக சொன்னீர்களா?’’ என்று மாஜிஸ்திரேட்டு கேட்டார். அதற்கு ராகுல்காந்தி, ‘‘தேசிய தலைவர் என்ற முறையில், தேசநலன் கருதி, ஊழல் மற்றும் வேலையில்லா திண்டாட்ட பிரச்சினைகளை பொதுக்கூட்டங்களில் பேசுவது வழக்கம். அந்த பிரச்சினைகளை எழுப்ப எனக்கு உரிமை உள்ளது’’ என்று பதில் அளித்தார்.

சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆதாரங்கள் தொடர்பான பல கேள்விகளுக்கு ராகுல்காந்தி ‘தெரியாது’ என்று பதில் அளித்தார்.

அவரது பதில்கள், வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டன. பின்னர், அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 12-ந்தேதிக்கு மாஜிஸ்திரேட்டு தள்ளிவைத்தார்.

Next Story