நிலக்கரி சப்ளை செய்ய வழங்கிய டெண்டரில் முறைகேடு; உத்தவ் தாக்கரேக்கு, காங்கிரஸ் தலைவர் கடிதம்


நிலக்கரி சப்ளை செய்ய வழங்கிய டெண்டரில் முறைகேடு; உத்தவ் தாக்கரேக்கு, காங்கிரஸ் தலைவர் கடிதம்
x
தினத்தந்தி 2 July 2021 8:11 PM GMT (Updated: 2 July 2021 8:11 PM GMT)

மாநில மின் உற்பத்தி நிறுவனத்திற்கு நிலக்கரியை சப்ளை செய்ய வழங்கிய டெண்டரில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் நானா படோலே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கடிதம் எழுதி உள்ளார்.

டெண்டரில் முறைகேடு
மராட்டிய காங்கிரஸ் தலைவர் நானா படோலே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் மாநில சுரங்க கழகம், மின் உற்பத்தி நிறுவனத்துக்கு நிலக்கரி சப்ளை செய்வது தொடர்பாக தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மராட்டிய மாநில சுரங்கத்துறை கழகம் நிலக்கரியை சுத்தம் செய்து மாநில மின் உற்பத்தி நிறுவனத்திற்கு வழங்கும் பணிக்கு ருக்மாய் என்ற தனியார் நிறுவனத்தை தேர்வு செய்து உள்ளது. ஆனால் அந்த தனியார் நிறுவனத்துக்கு நிலக்கரியை சுத்தம் செய்வதில் எந்த அனுபவமும் கிடையாது என்பதும், போதிய தொடர்போ அல்லது பாதுகாப்பு உரிமங்களோ இல்லை என புகார்கள் வந்து உள்ளது. மேலும் குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தை தேசிய சட்ட தீர்ப்பாயம் தடை செய்து உள்ளது.

விசாரணை நடத்த வேண்டும்
நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத போதும் ருக்மாய் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தால் சரியான நேரத்துக்கு மாநில மின்உற்பத்தி நிறுவனத்திற்கு நிலக்கரியை வழங்க முடியாது. இதனால் மின்உற்பத்தி பாதிக்கும். எனவே டெண்டர் விடுவதில் நடந்த முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் அதற்கு தடைவிதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டது.

சொந்த கட்சி மந்திரி
மாநில மின்துறை மந்திரியாக காங்கிரசை சேர்ந்த நிதின் ராவத் உள்ளார். சொந்த கட்சியை சோ்ந்த மந்திரி சார்ந்த துறை குறித்து நானா படோலே முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் மாநில சுரங்க கழகத்தின் டெண்டருக்கு எதிராக தான் கடிதம் எழுதியதாகவும், மின்துறைக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என நானா படோலே கூறியுள்ளார்.

Next Story