புதுச்சேரி அமைச்சர்களுக்கு விரைவில் இலாகா ஒதுக்கீடு: முதல்-அமைச்சர் ரங்கசாமி


புதுச்சேரி அமைச்சர்களுக்கு விரைவில் இலாகா ஒதுக்கீடு: முதல்-அமைச்சர் ரங்கசாமி
x
தினத்தந்தி 2 July 2021 8:37 PM GMT (Updated: 2 July 2021 8:37 PM GMT)

அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இலாகா ஒதுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

ஊரடங்கு
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தியது. இருப்பினும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை.இதனால் தொடர்ந்து அடுத்தடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்தநிலையில் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வேலை இழந்து 
வருமானமின்றி குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்தனர். வாழ்வாதாரம் இழந்த ஏழை எளியவர்களுக்கு உதவிடும் வகையில் கொரோனா நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

அதிகாரிகளுடன் ஆலோசனை
இந்தநிலையில் முதல்-அமைச்சராக பதவி ஏற்றதும் கொரோனா நிவாரணமாக அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று ரங்கசாமி அறிவித்தார். ஆனால் மாநிலத்தின் நிதிநிலையை கருத்தில் கொண்டு உடனடியாக பொதுமக்களின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்த முடியவில்லை.இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி 
கொரோனா நிவாரண நிதியை ரூ.1,500 வீதம் 2 தவணையாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் தவணை கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது.இந்த மாதம் (ஜூலை) பயனாளிகளின் வங்கி கணக்கில் 2-வது தவணை தொகை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

விரைவில் இலாகா ஒதுக்கீடு
புதுவையில் தற்போது கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. மாநில வருவாயை பெருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே அரசு அறிவித்தபடி கொரோனா நிவாரண 2-வது தவணை தொகையை விரைவில் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று கொரோனா நிவாரணத்தின் 2-வது தவணை தொகையை இந்த மாதம் 2-வது வாரத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் தினத்தந்தி நிருபர் கேட்ட போது, புதுவையில் கொரோனா நிவாரண தொகையின் 2-வது தவணை தொகை அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இம்மாதம் 2-வது வாரத்தில் அதாவது 10-ந் தேதிக்கு பின்னர் வழங்கப்படும் என்றார். அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு குறித்து கேட்டதற்கு, புதிய அமைச்சர்கள் பதவி ஏற்று உள்ளனர். அவர்களுக்கு இலாகா ஒதுக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இலாகா ஒதுக்கீடு செய்யப்படும் என்று ரங்கசாமி தெரிவித்தார்.

Next Story