சுவேந்து அதிகாரியை சந்திக்கவில்லை: துஷார் மேத்தா மறுப்பு


சுவேந்து அதிகாரி
x
சுவேந்து அதிகாரி
தினத்தந்தி 3 July 2021 3:13 AM GMT (Updated: 3 July 2021 3:13 AM GMT)

மே.வங்க பாஜக தலைவரான சுவேந்து அதிகாரியை, தான் சந்திக்கவில்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி மீதான பல்வேறு ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளில் சிபிஐ தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி உள்ளார். 

இந்நிலையில், துஷார் மேத்தாவை சுவேந்து அதிகாரி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசியதாக செய்திகள் வெளியாயின. இதைத் தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் துஷார் மேத்தாவை சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால், இது குறித்து விளக்கம் அளித்துள்ள சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சுவேந்து அதிகாரி தனது வீட்டிற்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி வந்ததாகவும் ஆனால் தான் அவரை சந்திக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட துஷார் மேத்தா அறிக்கையில், ''வியாழக்கிழமையன்று எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் என்னை சந்திக்க சுவேந்து அதிகாரி வந்தார். ஆனால், அப்போது ஏற்கனவே  திட்டமிட்ட சந்திப்புகளில் நான் ஈடுபட்டிருந்ததால், அவரை காத்திருக்குமாறு உதவியாளர் மூலம் கூறினேன். 

கூட்டம் முடிந்ததும், அவரை சந்திக்க முடியாத சூழ்நிலை இருப்பதை உதவியாளர் மூலம் தெரிவித்தேன். இதையடுத்து, என்னை சந்திக்காமல் சுவேந்து அதிகாரி சென்று விட்டார். இதனால், அவரை நான் சந்தித்தேன் என்ற கேள்வியே எழவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.


Next Story