சட்டசபை தேர்தலின் போது கேரளாவில் 2.67 கோடி வாக்காளர்களின் தகவல்கள் கசிந்தது


சட்டசபை தேர்தலின் போது கேரளாவில் 2.67 கோடி வாக்காளர்களின் தகவல்கள் கசிந்தது
x
தினத்தந்தி 3 July 2021 5:30 PM GMT (Updated: 3 July 2021 5:30 PM GMT)

கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலுக்கு முன்பாக மாநிலத்தில் கோடிக்கணக்கான வாக்காளர்களுக்கு இரட்டை வாக்குகள் இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியது. 

அந்தவகையில் 140 சட்டசபை தொகுதிகளிலும் சுமார் 4.34 கோடி போலி வாக்காளர்கள் இருப்பதாக கூறி அந்த பட்டியலை முந்தைய எதிர்க்கட்சி தலைவரான ரமேஷ் சென்னிதலா வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரியான தீக்காராம் மீனா, எனினும் வெறும் 38 ஆயிரம் பேருக்கு இரட்டை வாக்குகள் இருப்பதாக உறுதிப்படுத்தினார்.

இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு, மாநிலத்தில் ஒரு வாக்காளருக்கு ஒரு ஓட்டு மட்டுமே இருப்பதை உறுதி செய்யுமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. 

இந்த நிலையில் கடந்த சட்டசபை தேர்தலின்போது 2.67 வாக்காளர்களின் தகவல்கள் கசிந்திருப்பதாக மாநில தேர்தல் கமிஷன் தற்போது புகார் கூறியுள்ளது. இது தொடர்பாக இணை தலைமை தேர்தல் அதிகாரி கிருஷ்ணதாசன் அளித்த புகாரின்பேரில் மாநில குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story