கேரளாவில் கர்ப்பிணி பெண் உள்பட 15 பேருக்கு ஜிகா வைரஸ்


கேரளாவில் கர்ப்பிணி பெண் உள்பட 15 பேருக்கு ஜிகா வைரஸ்
x
தினத்தந்தி 9 July 2021 8:38 AM GMT (Updated: 9 July 2021 8:41 AM GMT)

தமிழக கேரள எல்லை செறுவாரகோணம் பகுதியில் 30-க்கும் மேற்பட்டவர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்

கேரளாவில் கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரள  எல்லையான செறுவார கோணம் பகுதியை சேர்ந்த  24 வயதான கர்ப்பணிக்கு காய்ச்சல், தலைவலி, தோலில் தடிப்புகள் ஏற்பட்டன. பரிசோதனையில் அவருக்கு கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

அதைத்தொடர்ந்து மேலும் சிலரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில், மேலும் 14 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கைகளில் கேரள  சுகாதாரதுறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மேலும் தமிழக கேரள எல்லை செறுவாரகோணம் பகுதியில் 30-க்கும் மேற்பட்டவர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 

ஜிகா, குமரி மாவட்டத்தில் பரவாமல் தடுக்க தமிழக  சுகாதாரத்துறை சார்பில் எல்லை பகுதிகளில் நோய்தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுவடைந்துள்ளது.

'ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சலும் பரவுகிறது. 

கர்ப்பிணிகளுக்கு பரவினால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படலாம். இதனால் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவும் கூட சில நேரங்களில் ஏற்படலாம். 

மேலும், ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நபருடன் உடல்ரீதியான உறவு வைத்துக்கொண்டாலும் இந்த வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது. ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும்; பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7வது நாளில் அறிகுறிகள் காணப்படும். இதுவரை ஜிகா வைரசுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை' என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story