வீர்பத்ர சிங் எனது வழிகாட்டி; அவரது மறைவு பேரிழப்பு: ஜே.பி. நட்டா


வீர்பத்ர சிங் எனது வழிகாட்டி; அவரது மறைவு பேரிழப்பு:  ஜே.பி. நட்டா
x
தினத்தந்தி 9 July 2021 9:27 AM GMT (Updated: 9 July 2021 9:27 AM GMT)

வீர்பத்ர சிங் எனது வழிகாட்டியாக இருந்தவர் என்றும் அவரது மறைவு பேரிழப்பு என்றும் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.



சிம்லா

இமாசல பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்து வந்த வீர்பத்ர சிங் தனது 87வது வயதில் நேற்று காலமானார்.  

அவர் நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்நிலையில், சிம்லா நகரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை காலமானார்.  அவரது உடலுக்கு எம்பால்மிங் செய்யும் நடைமுறைகள் நடந்தன.  இதன்பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுபற்றி சிம்லா நகரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் ஜனக் ராஜ் கூறும்போது, கடந்த ஏப்ரல் 30ந்தேதி எங்களுடைய மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசமடைந்தது.  இந்நிலையில், அதிகாலை 4 மணியளவில் அவர் காலமானார் என கூறியுள்ளார்.

அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, பின்பு அதில் இருந்து குணமடைந்து உள்ளார்.  எனினும், அதன்பின்பு நிம்மோனியாவால் அவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  அவருக்கு நீரிழிவு மற்றும் பிற சுகாதார குறைபாடுகளும் இருந்துள்ளன.  கடந்த 2 நாட்களுக்கு முன் சுவாச கோளாறு ஏற்பட்டு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார் என மருத்துவர் ஜனக் ராஜ் கூறியுள்ளார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்களை வெளியிட்டு உள்ளனர்.  இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், வீர்பத்ர சிங் நீண்ட அரசியல் பயணம் கொண்டவர்.  சட்டமன்ற அனுபவம் மற்றும் நிர்வாக திறன் வாய்ந்தவர்.  இமாசல பிரதேசத்திற்கு முக்கிய பங்காற்றிய அவர் மக்களுக்காக பணியாற்றியுள்ளார்.  அவரது மறைவு வருத்தமளிக்கிறது.  அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு என்னுடைய இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, வீர்பத்ர சிங் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் இரங்கல் தெரிவித்து கொண்டார்.  இந்நிலையில், அவரது உடலுக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.  இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் மற்றும் நட்டா இருவரும், வீர்பத்ர சிங்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் அளித்தனர்.

இதனை தொடர்ந்து டி.ஜி.பி. சஞ்சய் குண்டு கூறும்போது, அவரது உடல் கட்சி அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்படும்.  அதன்பின்னர் ராம்பூரில் இரவு முழுவதும் உடல் வைக்கப்படும்.  அவரது உடலுக்கு மாநில அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி. நட்டா, நாங்கள் இருவரும், வேற்றுமையிலும் ஒருவரின் உணர்வுகளுக்கு மற்றவர் மதிப்பு அளிப்பது என்று முடிவு செய்து கொண்டோம்.  அவர் முதல் மந்திரியாக இருந்தபோது, எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  அவர் எனது வழிகாட்டியும் கூட.  அவரது மறைவு என்பது ஒரு பெருத்த இழப்பு என கூறியுள்ளார்.


Next Story