தீர்ப்பாய உறுப்பினர்களின் பதவிக்காலம் குறித்த மத்திய அரசின் சட்டம் செல்லாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு


தீர்ப்பாய உறுப்பினர்களின் பதவிக்காலம் குறித்த மத்திய அரசின் சட்டம் செல்லாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 15 July 2021 1:20 AM GMT (Updated: 15 July 2021 1:20 AM GMT)

தீர்ப்பாயங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் என நிர்ணயித்த மத்திய அரசின் அவசர சட்டம் செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

புதுடெல்லி,

தேசிய கம்பெனி சட்ட தீா்ப்பாயம், தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயம் உள்ளிட்ட தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி சென்னை வக்கீல்கள் சங்கம், ராஜஸ்தான் வக்கீல்கள் சங்கம், தேசிய கம்பெனி சட்ட தீா்ப்பாய வக்கீல்கள் சங்கம் ஆகியவை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

கடந்த மே 24-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது மனுதாரர்கள் சார்பில், தேசிய கம்பெனி சட்ட தீா்ப்பாயம், தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயம் உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.

அப்போது நீதிபதிகள், தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்கும், காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு எவ்வித முடிவும் எடுக்காமல் இருப்பதற்கும் கவலை வெளியிட்டனர்.

அதற்கு மத்திய அரசின் சார்பில், தீர்ப்பாயங்களில் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் இருக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தில் உறுப்பினர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாடு காரணமாக தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என வாதிடப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், தீர்ப்பாயங்களுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலத்தை குறிப்பிடாமல் உடனடியாக நியமனங்களைத் தொடங்குங்கள். உறுப்பினர்களின் பதவிக்காலம் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று கூறிய தீர்ப்பு வருமாறு:-

மத்திய அரசின் சார்பில், தீர்ப்பாயங்களில் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு மாறாக, பதவிக்காலம் 4 ஆண்டுகள் என நிர்ணயிக்கும் சட்டம் நீதித்துறை சுதந்திரத்துக்கு முரணாக உள்ளது. எனவே அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான அந்த சட்டம் செல்லாது.

பல்வேறு தீர்ப்பாயங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை விரைவாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story