பா.ஜனதா அல்லாத கட்சிகளை ஓரணியில் திரட்டுகிறாா், மம்தா - இம்மாதம் டெல்லி சென்று தலைவர்களுடன் சந்திப்பு

மம்தா பானர்ஜி இம்மாதம் டெல்லி செல்கிறார். பா.ஜனதா அல்லாத கட்சிகளை ஓரணியில் திரட்டும் நோக்கத்தில் அவர் பல்வேறு தலைவர்களை சந்திக்கிறார்.
கொல்கத்தா,
அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடக்கிறது. அதில், பா.ஜனதாவை ஆட்சிக்கட்டிலில் இருந்து கீழே இறக்க வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டுகின்றன.
இதற்கிடையே, மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜனதா அல்லாத அரசியல் கட்சிகளை ஓரணியில் திரட்ட திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் இம்மாதம் டெல்லி செல்கிறார்.
அநேகமாக, 25-ந்தேதி அவர் டெல்லி செல்லலாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர் டெல்லி செல்லும் நேரம், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நேரமாக இருப்பதால், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு இருப்பார்கள். எனவே, அவர்களை எல்லாம் மம்தா பானர்ஜி சந்திக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, சரத்பவார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக, பா.ஜனதா அல்லாத கட்சிகளை ஓரணியில் திரட்டுவது பற்றி அவர் ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லியில் சில நாட்கள் தங்கி இருப்பார். சில வெளிமாநிலங்களுக்கும் அவர் செல்வார் என்று தெரிகிறது.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பெற்ற அமோக வெற்றியால் மம்தா பானர்ஜியின் அந்தஸ்து அதிகரித்துள்ளது. அத்துடன், தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறுவதற்காக அவர் இந்த முயற்சியில் ஈடுபடுவதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி பயணம் குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-
எனது டெல்லி பயணம் வழக்கத்துக்கு மாறானது அல்ல. தேர்தல் முடிந்தவுடன் டெல்லி சென்று பழைய, புதிய நண்பர்களை சந்திப்பது வழக்கம். இப்போது, கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் டெல்லி சென்று சில நாட்கள் தங்க போகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story