புதிய விலை நிர்ணயித்து, மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் 66 கோடி தடுப்பூசி கொள்முதல் - மத்திய அரசு நடவடிக்கை


புதிய விலை நிர்ணயித்து, மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் 66 கோடி தடுப்பூசி கொள்முதல் - மத்திய அரசு நடவடிக்கை
x
தினத்தந்தி 17 July 2021 8:23 PM GMT (Updated: 2021-07-18T01:53:26+05:30)

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வும் மக்களிடம் அதிகம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு கடும்தட்டுப்பாடு நிலவுகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து வருவதால் இவற்றின் உற்பத்தியை பெருக்குமாறு உற்பத்தி நிறுவனங்களான புனே இந்திய சீரம் நிறுவனத்துக்கும், ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துவந்தது.

ஆனால் ஒரு ‘டோஸ்’ தடுப்பூசியை ரூ.150-க்கு விற்றுக்கொண்டு, உற்பத்தியைப் பெருக்க மேலும் முதலீடு செய்வது சாத்தியமில்லை என மருந்து நிறுவனங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் இவ்விரு தடுப்பூசிகளின் விலையையும் மத்திய அரசு உயர்த்தி புதிய விலையை நிர்ணயம் செய்து உள்ளது.

ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ.205 ஆகவும், கோவேக்சின் தடுப்பூசி விலை ரூ.215 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வரிகளையும் சேர்த்து கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ.215.25; கோவேக்சின் தடுப்பூசியின் விலை ரூ.225.75 ஆகும்.

கடந்த மாதம் 21-ந்தேதி அமலுக்கு வந்துள்ள புதிய தடுப்பூசி கொள்கையின்படி இவ்விரு தடுப்பூசிகளின் உற்பத்தியாளர்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்யும்.

இவ்விரு தடுப்பூசிகளையும் மேலும் 66 கோடி ‘டோஸ்’ கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி 37.5 கோடி ‘டோஸ்’களும், கோவேக்சின் தடுப்பூசி 28.5 கோடி ‘டோஸ்’களும் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதற்கான ஆர்டர்களை முறையே இந்திய சீரம் நிறுவனத்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் மத்திய அரசு வழங்கி உள்ளது.

இந்த தடுப்பூசிகள் ஆகஸ்டு-டிசம்பர் மாதங்கள் இடையே வினியோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story