லகிம்பூர் கேரி மாவட்டத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும் - உத்தரபிரதேச அரசுக்கு பிரியங்கா வலியுறுத்தல்


லகிம்பூர் கேரி மாவட்டத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும் - உத்தரபிரதேச அரசுக்கு பிரியங்கா வலியுறுத்தல்
x

வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற பெண்கள் அவமதிக்கப்பட்ட லகிம்பூர் மாவட்டத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வலியுறுத்தி உள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் லகிம்பூர் ேகரி மாவட்டத்துக்கு உட்பட்ட பக்வான் ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக சமாஜ்வாடி சார்பில் ரித்து சிங் என்ற பெண் கடந்த 8-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார்.

அவரது பெயரை முன்மொழிவதற்காக அனிதா யாதவ் என்ற பெண்ணும் உடன் சென்றார்.

அப்போது அங்கே குழுமியிருந்த சிலர் இரண்டு பெண்களின் சேலையை பிடித்து இழுத்து அவர்களிம் தவறாக நடந்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதை தடுப்பதற்காக இந்த அவமதிப்பு செயலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆளும் பா.ஜனதா தொண்டர்கள்தான் இந்த இழி செயலில் ஈடுபட்டதாக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.

இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா அப்போதே கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா, பா.ஜனதா தொண்டர்களால் அவமதிப்புக்கு உள்ளான ரித்து சிங் மற்றும் அனிதா யாதவ் ஆகிய 2 பெண்களின் வீட்டுக்கு நேற்று நேரில் சென்று நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார். மேலும் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற பெண்களின் சேலைகள் பிடித்து இழுக்கப்பட்டு உள்ளது. துணிகள் கிழிக்கப்பட்டு உள்ளன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களை யாரும் காப்பாற்றவில்லை.

இது ஜனநாயகத்துக்கான போராட்டம். நமது ஜனநாயகத்தில் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காக அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற பெண் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.

எனவே லகிம்பூர் கேரி மாவட்டத்தில் நடந்த தேர்தலை ரத்து செய்து விட்டு, மறு தேர்தல் நடத்த வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்த அனைத்து பகுதிகளிலும் மறுதேர்தல் நடத்த வேண்டும்.

உத்தரபிரதேசத்தில் ஜனநாயகமே இல்லை. பணபலமும், ஆள் பலமும் உள்ளவர்கள் அனைத்து குற்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். தேர்தலில் வென்றும் விடுகிறார்கள்.

மாநிலம் முழுவதும் நடந்த பஞ்சாயத்து தேர்தல்களில் வன்முறை சம்பவங்கள்தான் அரங்கேறின. குண்டுவெடிப்புகள், துப்பாக்கிச்சூடு, தாக்குதல்கள், குழப்பங்கள் நிறைந்திருந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரதமர் மோடியோ, உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் யோகி அரசின் செயல்பாடுகளை புகழ்ந்து இருக்கிறார்.

இவ்வாறு பிரியங்கா கூறினார்.

Next Story