மேகதாது விவகாரம்; அரசு உறுதி அளிக்கும் வரை தொடர்ச்சியாக வலியுறுத்துவோம்: திருச்சி சிவா


மேகதாது விவகாரம்; அரசு உறுதி அளிக்கும் வரை தொடர்ச்சியாக வலியுறுத்துவோம்:  திருச்சி சிவா
x
தினத்தந்தி 19 July 2021 1:27 PM GMT (Updated: 19 July 2021 1:27 PM GMT)

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்கும் வரை தொடர்ச்சியாக வலியுறுத்துவோம் என தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.  எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் இன்று ஒத்தி வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தி.மு.க. மாநிலங்களவை குழு தலைவரான எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறும்போது, மாநிலங்களவையில் ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு பிரச்னையை எழுப்பினர். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்னைகளை எழுப்பினர்.  தி.மு.க. தரப்பில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

ஆனால் அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க அவை தலைவர் ஒத்து கொள்ளவில்லை, இதனால் அமளி ஏற்பட்டது.  அவை நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேகதாது விவகாரம் தொடர்பாக, அவையில் மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும். அந்த உறுதி கிடைக்கும் வரை தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி போராடுவோம்.

நேரமில்லா நேரத்தில் இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நாளைய தினம் கேள்வி எழுப்ப உள்ளோம். அவையில், பிரதமர் அல்லது நீர்வளத்துறை மந்திரி யாரேனும் ஒருவர் மேகதாது விவகாரத்தில் அணை கட்டப்படாது என உறுதி அளிக்க வேண்டும்.  மேகதாது விவகாரத்தில் சொல்வது ஒன்று, செயல்படுத்துவது ஒன்றாக உள்ளது என கூறியுள்ளார்.


Next Story