இஸ்ரேல் உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் மந்திரிகள், நீதிபதி உள்பட 300 பேரின் செல்போன் ஒட்டுகேட்பா? ராகுல்காந்தி பெயரும் இருப்பதாக தகவல்


இஸ்ரேல் உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் மந்திரிகள், நீதிபதி உள்பட 300 பேரின் செல்போன் ஒட்டுகேட்பா? ராகுல்காந்தி பெயரும் இருப்பதாக தகவல்
x
தினத்தந்தி 20 July 2021 3:18 AM GMT (Updated: 20 July 2021 3:18 AM GMT)

இஸ்ரேல் உளவு மென்பொருளை பயன்படுத்தி, இந்தியாவில் மந்திரிகள், நீதிபதி, தொழிலதிபர்கள் உள்பட 300 பேரின் செல்போன் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில், ராகுல்காந்தி பெயரும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி,

இஸ்ரேல் நாட்டில் ‘என்.எஸ்.ஓ.’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனம் உருவாக்கிய ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள், ஐபோன்கள் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களில் ஊடுருவி, அவற்றில் இருந்து குறுஞ்செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் ஆகியவற்றை எடுக்கவும், செல்போன் பேச்சை பதிவு செய்யவும், மைக்குகளை ரகசியமாக இயக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் கைவசம் இருந்த 50 ஆயிரம் செல்போன் எண்களை பாரீசில் உள்ள ‘பார்பிட்டன் ஸ்டோரிஸ்’ என்ற நிறுவனமும், மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனலும் ரகசியமாக பெற்றுள்ளன. அந்த எண்களை 16 செய்தி நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளன.

அவற்றில் 15 ஆயிரம் எண்கள், மெக்சிகோ நாட்டை சேர்ந்தவை. மத்திய கிழக்கு நாடுகள், பிரான்ஸ், ஹங்கேரி, இந்தியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், பாகிஸ்தான், பிரான்ஸ், சவுதி அரேபியா ஆகிய நாடுகளை சேர்ந்த செல்போன் எண்களும் உள்ளன.

அந்த எண்களை ஆய்வு செய்த பத்திரிகையாளர்கள், உளவு பார்க்க தேர்வு செய்யப்பட்ட 50 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட தனிநபர்களின் செல்போன் எண்களை அடையாளம் கண்டுள்ளனர்.

அந்த பட்டியலில், 189 பத்திரிகையாளர்கள், 600-க்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், 65 தொழிலதிபர்கள், 85 மனித உரிமை இயக்கவாதிகள், பல்வேறு நாட்டு தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த 300-க்கு மேற்பட்டோரின் செல்போன் எண்களும் உள்ளன. அவர்களில் 2 மந்திரிகள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், ஒரு நீதிபதி, 40-க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரும் அடங்குவர்.

அவர்களது செல்போன்களில் உளவு மென்பொருளை ஊடுருவி உளவு பார்த்து விட்டார்களா? அல்லது உளவு பார்க்க முயற்சி நடந்ததா? என்று தெரியவில்லை. அதை உறுதிப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் 2 செல்போன் எண்களை உளவு பார்க்க முயற்சி நடந்ததாக இங்கிலாந்தை சேர்ந்த ‘கார்டியன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-

ராகுல்காந்தியின் 2 செல்போன் எண்கள், என்.எஸ்.ஓ. நிறுவனத்தால் உளவு பார்க்க தேர்வு செய்யப்பட்டன. 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பும், அதற்கு பிந்தைய மாதங்களிலும் இப்படி தேர்வு செய்யப்பட்டன.

அத்துடன், ராகுல்காந்திக்கு நெருக்கமான நண்பர்கள் 5 பேரின் செல்போன் எண்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோரின் செல்போன்களும் தேர்வு செய்யப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி ‘கார்டியன்’ பத்திரிகைக்கு பதில் அனுப்பியுள்ள ராகுல்காந்தி, ‘‘உங்கள் செய்தி உண்மையாக இருந்தால், அது நாட்டின் ஜனநாயக அடித்தளத்தின் மீதான தாக்குதல். இதுகுறித்து முழுமையாக விசாரித்து, இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம், இந்தியாவில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ‘பெகாசஸ்’ மென்பொருளை இஸ்ரேல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அமைப்புகளுக்கு மட்டுமே விற்றிருப்பதாக என்.எஸ்.ஓ. நிறுவனம் கூறியுள்ளது. எனவே, இந்தியாவில் மத்திய அரசுதான் செல்போன் உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் சந்தேகிக்கின்றன.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியதாவது:-

அதிகாரபூர்வமற்ற உளவு பணி எதுவும் நடக்க முடியாது என்று மத்திய அரசு மறுத்துள்ளது. அரசுகளுக்கு மட்டுமே ‘பெகாசஸ்’ மென்பொருள் விற்கப்பட்டுள்ளது. சீன அரசோ, பாகிஸ்தான் அரசோ இந்திய குடிமக்களை உளவு பார்த்திருக்க முடியாது.

இது, தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரம். ஆகவே, சுதந்திரமான நீதி விசாரணையோ அல்லது நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையோ நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பதிவில், ‘‘அவர் (மோடி) என்ன படித்துக்கொண்டிருக்கிறார் என்று நமக்கு தெரியும்-உங்கள் போனில் உள்ள எல்லாவற்றையும் படிக்கிறார்’’ என்று கூறியுள்ளார்.

இஸ்ரேல் நிறுவனத்துடன் என்ன தொடர்பு? என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கோரியுள்ளார். இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கூறியுள்ளார்.

இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மறுப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

இந்த குற்றச்சாட்டு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதது. மத்திய அரசு எவ்வித உளவு வேலையிலும் ஈடுபடவில்லை. இதில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, இந்தியாவில் அங்கீகாரமற்ற நபர்கள் யாரும் சட்டவிரோத கண்காணிப்பில் ஈடுபடுவது சாத்தியம் அல்ல.

அந்த செல்போன் எண்கள், உளவு பார்க்கப்பட்டதா அல்லது அந்த முயற்சி நடந்ததா என்பது தெரிவிக்கப்படவில்லை. தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தாமல் எந்த முடிவுக்கும் வர முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், பெகாசஸ் மென்பொருளை பயங்கரவாதிகள் மற்றும் கொடிய கிரிமினல்களுக்கு எதிராக உளவு பார்ப்பதற்குத்தான் விற்றிருப்பதாக இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ. விளக்கம் அளித்துள்ளது.

Next Story