18 வயது பிரிவினருக்கு போடுவதற்கு 188 கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி தேவை - மாநிலங்களவையில் அறிவிப்பு


18 வயது பிரிவினருக்கு போடுவதற்கு 188 கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி தேவை - மாநிலங்களவையில் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 July 2021 6:41 AM GMT (Updated: 21 July 2021 6:41 AM GMT)

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடுவதற்கு 188 கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி தேவைப்படுவதாக மாநிலங்களவையில் அறிவிக்கப்பட்டது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் 21 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடுகிற திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில், “ நமது நாட்டில் தேவைப்படுகிற தடுப்பூசிகளை தயாரிக்கிற திறன், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு இருக்கிறதா?” என நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்கு சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் எழுத்துமூலம் பதில் அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் மக்கள்தொகை 94 கோடி ஆகும். எனவே இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு 188 கோடி ‘டோஸ் ’ தடுப்பூசி தேவைப்படுகிறது.

எதிர்காலத்தில் ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசியின் பயன்பாடுகளுக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்படுமானால் இந்த எண்ணிக்கை குறையும்.

அடுத்த ஆண்டு ஜனவரி-டிசம்பர் இடையே நமது நாட்டில் 187 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், தற்போது உருவாக்கப்பட்டு வருகிற தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் கிடைக்கக்கூடும். எனவே தகுதியான மக்களுக்கு மேலும் தடுப்பூசிகள் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

* மற்றொரு பதிலில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.600, கோவேக்சின் தடுப்பூசி ரூ.1,200 என்ற விலையில் தனியார் ஆஸ்பத்திரிகள் கொள்முதல் செய்யலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் குறிப்பிட்டுள்ளார். ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை ரூ.948 ஆகும்.

*தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடுவதற்கு சேவைக்கட்டணம் ரூ.150 என அரசு நிர்ணயித்தள்ளது. அதே நேரத்தில் அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாகவே தொடர்ந்து தடுப்பூசி போடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

* தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தடுப்பூசி கொள்முதலுக்கான விலையை தடுப்பூசி உற்பத்தியாளர்கள் நிர்ணயம் செய்துகொள்ளலாம். ஆனால் அதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

* இன்னொரு கேள்விக்கு சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் பதில் அளிக்கையில் “நமது நாட்டில் தற்போது கிடைக்கும் கொரோனா தடுப்பூசிகளில் வி.வி.எம். என்று சொல்லப்படுகிற தடுப்பூசி வியால் மானிட்டர்கள் இல்லை” என்று தெரிவித்தார்.

Next Story