ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லையா? மாநிலங்கள் அளித்த தகவலைத்தான் மத்திய அரசு தெரிவித்தது


ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லையா? மாநிலங்கள் அளித்த தகவலைத்தான் மத்திய அரசு தெரிவித்தது
x
தினத்தந்தி 21 July 2021 10:49 PM GMT (Updated: 21 July 2021 10:49 PM GMT)

கொரோனா இரண்டாவது அலையின்போது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று மாநிலங்கள் அளித்த தகவலைத்தான் மத்திய அரசு தெரிவித்தது என்று பா.ஜனதா விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் எழுத்துமூலம் பதில் அளித்தார். அதில், கொரோனா இரண்டாவது அலையின்போது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என்று கூறப்பட்டு இருந்தது.

இதற்கு கே.சி.வேணுகோபால் கண்டனம் தெரிவித்தார். மந்திரி மீது உரிமை பிரச்சினை கொண்டுவரப் போவதாக கூறினார். இதுபோல், ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்களும் விமர்சித்துள்ளனர்.

இந்தநிலையில், இவற்றுக்கு பதில் அளிக்கும்வகையில், பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-

சுகாதாரம் என்பது மாநில விவகாரம். எனவே, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த தகவல்கள் அடிப்படையில்தான் மத்திய அரசின் பதில் அமைந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறந்ததாக எந்த மாநிலமும் தகவல் அனுப்பவில்லை.

ராகுல்காந்தியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் இப்பிரச்சினையில் அரசியல் செய்கிறார்கள். அவர்களது கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்கள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று தெரிவித்துள்ளன.

2-வது அலையின்போது, ராகுல்காந்தி அடிக்கடி டுவிட்டரில் 2 வரிகளில் பொய் செய்தி பரப்பி வந்தார். ஒரு பெரிய அரசியல் கட்சியின் முன்னாள் தலைவர் இப்படி பொறுப்பின்றி நடந்து கொள்வது வேதனையாக இருக்கிறது.

டெல்லியில் ஜெய்ப்பூர் கோல்டன் ஆஸ்பத்திரியில் கடந்த ஏப்ரல் 23 மற்றும் 24-ந் தேதிகளில் 21 கொரோனா நோயாளிகள் இறந்தனர். அதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் அல்ல என்று டெல்லி அரசு கமிட்டி, டெல்லி ஐகோர்ட்டில் தெரிவித்தது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று மராட்டிய மாநில அரசு, மும்பை ஐகோர்ட்டில் தெரிவித்தது. சத்தீ்ஷ்கார் மாநில சுகாதார மந்திரி சிங்தியோவும் இதே கருத்தை தெரிவித்தார். எனவே, பொய் சொல்வதற்கு பதிலாக, தனது கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் ராகுல்காந்தி பேச வேண்டும்.

கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது, மோடி அரசை தாக்க ேவண்டும் என்பதற்காக, ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறந்து வருவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

ஆனால், கோர்ட்டுகளில் எழுத்துமூலம் தெரிவிக்கும்போது, வேறு நிலைப்பாட்டை எடுத்தன. எனவே, இந்த பிரச்சினையை அரசியல் ஆக்கவே அவை விரும்புவது தெளிவாகிறது.

அக்கட்சிகளின் கையை மத்திய அரசு கட்டவில்லை. எனவே, எழுத்துமூலம் கேட்கும்போது, உண்மையை தெரிவித்து இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story