உணவு பதப்படுத்துதல் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு - ஜெகத்ரட்சகன் எம்.பி. கேள்விக்கு மத்திய மந்திரி பதில்


உணவு பதப்படுத்துதல் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு - ஜெகத்ரட்சகன் எம்.பி. கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
x
தினத்தந்தி 22 July 2021 2:47 AM GMT (Updated: 22 July 2021 2:47 AM GMT)

உணவு பதப்படுத்துதல் துறையில் 100 சதவீத அளவிற்கு அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணை மந்திரி பிரகலாத் சிங் பட்டேல் பதில் அளித்துள்ளார்.

புதுடெல்லி, 

நாடாளுமன்றத்தில் அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி., எஸ்.ஜெகத்ரட்சகன், மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமரிடம், ‘70 சதவீதத்துக்கும் மேலான உணவு தானியங்கள் கிராமப்புற விவசாயிகளிடமே இருப்பதால், அறுவடைக்கு பிந்தைய இழப்பை தடுக்க அரசு சார்பில் ஏதேனும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதா? என்று எழுத்துபூர்வமாக கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு மத்திய மந்திரி அனுப்பிய பதில் வருமாறு:-

பெரும்பகுதியான உணவு தானியங்கள் கிராமப்புற விவசாயிகளால் சேமிக்கப்படுகின்றன. ‘எனது கிராமம், எனது பெருமை’ என்ற திட்டத்தின் மூலம் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம், கண்காட்சிகள் வழியாக விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த தொழில் முனைவோர்களுக்கும் உரிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

மேலும், மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தால் வடிவமைக்கபட்ட உபகரணங்கள் மூலமாக, உணவு தானியங்களை பூச்சிகளிடமம் இருந்தும், காளான்களிடம் இருந்தும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு குறுகிய கால கடனாக 7 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் வரை வழங்கப்படுகிறது. கால்நடைகள், பால் வியாபாரம், மீன் வளர்ப்பு போன்ற முயற்சிகளுக்கும் குறுகிய கால கடன் அளிக்கப்படுவதோடு, இக்கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தினால் மீண்டும் 4 சதவீத வட்டி சலுகையும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.

மேலும் ஜெகத்ரட்சகன், ‘பன்முகத்தன்மை கொண்ட இந்திய உணவு முறைகளினால், உணவு பதப்படுத்துதல் துறையின் வளர்ச்சியில் ஏதேனும் தேக்கம் ஏற்பட்டுள்ளதா?’ என்று மத்திய இணை மந்திரி பிரகலாத் சிங் பட்டேலிடம் எழுத்து மூலம் கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு அவர், “உணவு பதப்படுத்துதல் துறையின் வளர்ச்சி 2014-15 ஆண்டில் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடியில் இருந்து 2018-19 ஆண்டில் ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் கோடியாக வளர்ந்துள்ளது. இந்த துறையில் 100 சதவீத அளவிற்கு அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று பதில் அளித்துள்ளார்.

Next Story