ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை:மத்திய இணை மந்திரி மீது உரிமை மீறல் நோட்டீஸ்


ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை:மத்திய  இணை மந்திரி மீது உரிமை மீறல் நோட்டீஸ்
x
தினத்தந்தி 22 July 2021 8:13 AM GMT (Updated: 22 July 2021 8:13 AM GMT)

இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியை சேர்ந்த பினோய் விஸ்வம் எம்.பி. மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

புதுடெல்லி:

கொரோனா 2 வது  அலையின்போது நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை' என, மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் மாநிலங்களவையில்  நேற்று எழுத்துபூர்வமாக தெரிவித்து இருந்தார்.

இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று "தவறான தகவல்கள்" அளித்து சுகாதாரத் துறை மந்திரி பாரதி பவார் பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டியது

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியை சேர்ந்த  பினோய் விஸ்வம்   எம்.பி.மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாடு முழுவதும் உயிரிழந்தனர். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் ஏராளமாக வந்தன. ஆக்சிஜன் சப்ளையைச் சீராக வழங்கக் கோரி ஒவ்வொரு மாநிலத்திலும் ஐகோர்ட்டில்  மக்கள் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டும்  தலையிட்டு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சப்ளையை உறுதி செய்ய உத்தரவிட்டது. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் குறித்த கணக்கு இல்லை என, மத்திய அரசு தெரிவிக்கிறது.

நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். ஆனால் உயிரிழந்தவர்களை அவமானப்படுத்தும் வகையில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவாரின் பதில் இருக்கிறது. இதனால் இந்த விவகாரத்தில் உரிமை மீறல் தீர்மான நோட்டீசாக இதை எடுத்து விசாரிக்க வேண்டும் என் அவர் அதில் தெரிவித்து உள்ளார்.

Next Story