மேலிட முடிவை ஏற்று கட்சி பணியில் ஈடுபடுவேன்: கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா


மேலிட முடிவை ஏற்று கட்சி பணியில் ஈடுபடுவேன்: கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா
x
தினத்தந்தி 22 July 2021 6:57 PM GMT (Updated: 22 July 2021 6:57 PM GMT)

மேலிட முடிவை ஏற்று கட்சி பணியில் ஈடுபடுவேன் என்றும், முதல்-மந்திரி பதவியை வருகிற 26-ந் தேதி ராஜினாமா செய்வதாகவும் எடியூரப்பா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபைக்கு கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.

75 வயதை தாண்டியவர்கள்
இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. குமாரசாமி முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். அவர் 14 மாதங்கள் ஆட்சி செய்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து அதே மாதம் 26-ந் தேதி எடியூரப்பா மாநிலத்தில் 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அப்போதே அவருக்கு 76 வயதாகி இருந்தது.இதனால் அவரை முதல்-மந்திரி பதவியில் அமர வைக்க பா.ஜனதா மேலிடம் தயக்கம் காட்டியது. ஏனென்றால் பா.ஜனதாவில் 75 வயதை தாண்டியவர்கள் தேர்தல், அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுகிறார்கள். அதன் அடிப்படையில் அத்வானி, முரளி மனோகர்ஜோஷி உள்ளிட்ட பெரிய தலைவர்களுக்கும் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக விஷயத்தில் அந்த விதிமுறையை பா.ஜனதா மேலிடத்தால் அமல்படுத்த முடியவில்லை.

பிரதமர் மோடி
இதையடுத்து நிபந்தனையுடன் எடியூரப்பாவுக்கு முதல்-மந்திரி பதவி அளிக்கப்பட்டது. அதாவது முதல்-மந்திரி பதவியில் 2 ஆண்டுகள் நீடித்த பிறகு அந்த பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பா.ஜனதா மேலிடம் கூறியது. அதன் அடிப்படையில் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த நிலையில் எடியூரப்பா பதவி ஏற்று வருகிற 26-ந் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன.இதனால் எடியூரப்பா மாற்றம் குறித்த தகவல்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவி வருகின்றன. இந்த நிலையில் பா.ஜனதா மேலிடத்தின் அழைப்பின் பேரில் கடந்த 16-ந் தேதி டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மேலிட தலைவர்கள், உங்களுக்கு வயதாகிவிட்டதால், கட்சியை முன்னெடுத்து செல்ல முதல்-மந்திரி பதவியை விட்டு விலக வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். கட்சியின் இந்த முடிவை ஏற்பதாக கூறிவிட்டு எடியூரப்பா வந்ததாக கூறப்படுகிறது.

ஆடியோ உரையாடல்
ஆனால் அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா, கட்சி மேலிடம் தன்னை ராஜினாமா செய்யுமாறு கூறவில்லை என்று கூறினார். இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் பேசியதாக வெளியான ஆடியோ உரையாடலில், எடியூரப்பா மாற்றப்படுவதாகவும், புதிய முதல்-மந்திரி நியமிக்கப்பட இருப்பதாகவும் இடம் பெற்று இருந்தது. இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் நளின்குமார் கட்டீலின் பேச்சு, எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்வது உறுதி தான் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய கருத்துகள், அவர் முதல்-மந்திரி பதவியை விட்டு விலகுவதை சூசகமாக உறுதி செய்வதுபோல் இருந்தது. இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறப்பு அக்கறை
“பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் என் மீது சிறப்பு அக்கறை காட்டுகிறார்கள். பா.ஜனதாவில் 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் அந்த 75 வயதை தாண்டிய பிறகும் எனக்கு மேலும் 2 ஆண்டுகள் அதாவது 78 வயது வரையிலும் முதல்-மந்திரியாக இருந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கினர்.நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்று வருகிற 26-ந் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அன்றைய தினம் பெங்களூருவில் 2 ஆண்டுகள் சாதனை குறித்த நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் நான் கலந்து கொள்கிறேன். அதன் பிறகு எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா என்ன முடிவு எடுக்கிறாரோ அதை நான் ஏற்றுக் கொள்வேன்.

வாழ்நாளில் மறக்க மாட்டேன்
26-ந் தேதிக்கு பிறகு கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவேன். கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதாவை ஆட்சி கட்டிலில் அமர்த்த நான் உழைப்பேன். அது எனது கடமை. அதனால் கட்சி தொண்டர்கள் யாரும் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தாமல், ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனக்கு ஆதரவாக மாநிலத்தின் ஒரு சில இடங்களில் போராட்டம் நடத்துவதாக அறிந்தேன். அவ்வாறு யாரும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம்.இது சரியல்ல. அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நூற்றுக்கணக்கான மடாதிபதிகள் என்னை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். இத்தகைய ஆதரவு யாருக்கும் கிடைக்கவில்லை. அனைவரும் கட்சியின் முடிவை ஏற்று ஒத்துழைக்க வேண்டும். யாரும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது.

சிபாரிசு செய்ய மாட்டேன்
அடுத்து முதல்-மந்திரியாக யார் வர வேண்டும் என்பது குறித்து நான் எந்த கருத்தையும் கூற மாட்டேன். என்னிடம் கருத்து கேட்டாலும், நான் யாருடைய பெயரையும் சிபாரிசு செய்ய மாட்டேன். மாநிலத்தில் தகுதியான நிறைய தலைவர்கள் உள்ளனர். கட்சி மேலிடமே அனைத்தையும் முடிவு செய்யும். பதவி விலகுமாறு இதுவரை எந்த தகவலும் மேலிடத்தில் இருந்து வரவில்லை. வருகிற 25-ந் தேதி ஏதாவது தகவல் வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.”

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

எடியூரப்பா நேற்று அளித்த இந்த பேட்டி அவர் வருகிற 26-ந் தேதி ராஜினாமா செய்யலாம் என்பதை உறுதி செய்வதை போல் இருந்தது.

Next Story