புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 2-வது நாளாக ஜந்தர் மந்தரில் போராட்டம்


புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 2-வது நாளாக ஜந்தர் மந்தரில் போராட்டம்
x
தினத்தந்தி 23 July 2021 7:20 AM GMT (Updated: 23 July 2021 7:20 AM GMT)

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 2 வது டெல்லி ஜந்தர் மந்தரில் 2வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.

இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. 3 புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதையொட்டி மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே தினந்தோறும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். ஆனால் விவசாயிகளின் இந்த திட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி அளிக்கவில்லை. கொரோனாவை காரணம் காட்டி விவசாயிகளுக்கு இந்த போராட்டத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தங்கள் போராட்டக்களத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்ற விவசாயிகள் முடிவு செய்தனர். அதாவது வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று முதல் தினந்தோறும் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என சம்யுக்தா கிசான் மோர்ச்சா முடிவு செய்தது. அதன்படி நேற்று முதல் நாள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஜந்தர்மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்திய இடத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. போலீசாரும், துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டு இருந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், மெட்டல் டிடெக்டர் சாதனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. 2 குடிநீர் டேங்கர் லாரிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

விவசாயிகள் அடையாள பேட்ஜ் குத்தி இருந்தனர். தங்களது சங்க கொடியை கையில் பிடித்திருந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாலை 5 மணிவரை அவர்கள் போராட்டம் நடந்தது.

இன்று 2 வது டெல்லி ஜந்தர் மந்தரில் 2வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல், ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை 200 விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆகஸ்டு 9-ந் தேதிவரை போராட்டம் நடக்கிறது.

Next Story