எடியூரப்பா ராஜினாமா விவகாரம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்


எடியூரப்பா ராஜினாமா விவகாரம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்
x
தினத்தந்தி 25 July 2021 7:13 PM GMT (Updated: 25 July 2021 7:13 PM GMT)

எடியூரப்பா ராஜினாமா விவகாரம் குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எங்களுக்கு கவலை இல்லை
முதல்-மந்திரி எடியூரப்பாவின் ராஜினாமா விவகாரம் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. அவர் நேற்று பெலகாவிக்கு சென்று மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. வெள்ள சேதங்களை மதிப்பிட எங்கள் கட்சி சார்பில் ஒரு குழுவை அமைத்துள்ளோம். அந்த குழு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.கடந்த 2020-ம் ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கே இந்த அரசு இன்னும் உரிய நிவாரணம் வழங்கவில்லை. வீடுகளை இழந்தவர்களுக்கு 
முழுமையான அளவில் நிவாரணம் வழங்கவில்லை. இந்த சூழ்நிலையில் இந்த அரசு எதற்காக ஆட்சியில் இருக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் வெள்ளம் ஏற்பட்டதும் பிரதமர் மோடி அங்கு சென்று நிவாரணம் அறிவிக்கிறார்.

பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை
ஆனால் கர்நாடகத்திற்கு ஏன் பிரதமர் வரவில்லை. உரிய உதவிகளை செய்யவில்லை. மத்திய அரசு கர்நாடகத்திற்கு தொடர்ந்து அநீதி இழைக்கிறது. ஆட்சி செய்யுவும், மக்களுக்கு சேவையாற்றவும் பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை. கொரோனா நெருக்கடி நேரத்தில் காங்கிரஸ் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்தது. இது மக்களுக்கு தெரியும்.அரசுக்கு அழுத்தம் கொடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வைத்தோம். வேலை இழந்த இளைஞர்களுக்கு வேலை வழங்க கோரி போராட்டம் நடத்தினோம். வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வேலையை செய்யவில்லை. எதிர்க்கட்சியாக இதை நாங்கள் செய்தோம். அதனால் மக்களுக்கு மாநில அரசு நிவாரண உதவிகளை அறிவித்தது.

தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
கர்நாடகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று மத்திய அரசுக்கு கர்நாடகம் தகவல்களை வழங்கியுள்ளது. அப்படி என்றால் சாம்ராஜ்நகரில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறந்த 24 கொரோனா நோயாளிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கியது ஏன்?. ஆக்சிஜன் கிடைக்காமல் 36 பேர் இறந்ததாக ஐகோா்ட்டு கூறியது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story