திரிபுரா-மிசோரம் எல்லையில் கலவரம்


திரிபுரா-மிசோரம் எல்லையில் கலவரம்
x
தினத்தந்தி 27 July 2021 6:02 PM GMT (Updated: 27 July 2021 6:02 PM GMT)

அசாம்-மிசோரம் எல்லையில் மோதல் ஏற்பட்ட நிலையில், திரிபுரா-மிசோரம் எல்லைப் பகுதியிலும் இரு மாநிலத்தவர் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் பலர் படுகாயம் அடைந்தனர். வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது.

திரிபுரா-மிசோரம் எல்லையிலும்...
வடகிழக்கு மாநிலங்களான அசாம்-மிசோரம் இடையிலான எல்லைப் பிரச்சினையில் முன்தினம் கடும் பதற்றம் ஏற்பட்டு, வன்முறையில் அசாம் போலீசார் 6 பேர் கொல்லப்பட்டனர். அங்கு பதற்றம் தணியாத அதேவேளையில்,  திரிபுரா-மிசோரம் எல்லையிலும் கலவரச் சூழல் ஏற்பட்டுள்ளது.

புரு பழங்குடியின அகதிகள்
மிசோரமை சேர்ந்த புரு பழங்குடி இனத்தினர் சுமார் 35 ஆயிரம் பேர் திரிபுரா மாநிலத்தில் அகதிகளாக வசித்து வருகின்றனர். அவர்களை திரிபுராவிலேயே நிரந்தரமாக தங்க அனுமதிப்பதற்கான ஒப்பந்தம், கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்டது.டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில், மத்திய அரசு, திரிபுரா, மிசோரம் மாநில அரசு பிரதிநிதிகளும், புரு இன பிரதிநிதிகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அகதிகள், உள்ளூர்காரர்கள் மோதல்
வடக்கு திரிபுராவின் காஞ்சன்புரில் மிசோரம் எல்லையை ஒட்டி காஸ்கோ புரு அகதிகள் முகாம் உள்ளது. இங்குள்ள அகதிகளுக்கும், உள்ளூர் பழங்குடி இனத்தவர்களுக்கும் இடையே முன்தினம் மோதல் ஏற்பட்டது.உள்ளூர் பழங்குடி இனத்தவர்களுக்கு, மாநில அரசின் சார்பில் வனத்துறை நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அப்பகுதியில் உள்ள புரு இனத்தினர், அந்த இடத்தை உள்ளூர்காரர்கள் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. இதனாலேயே மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது.

படுகாயம், தீவைப்பு
அந்த இடத்தைக் கைப்பற்ற உள்ளூர்க்காரர்கள் சென்றபோது புரு அகதிகள் அவர்களை ஆயுதங்களால் தாக்கினர். அதில் 23 பேர் படுகாயம் அடைந்தனர். உள்ளூர் பழங்குடியினர் திருப்பித் தாக்கியதில் புரு இனத்தவர்கள் 9 பேர் காயமடைந்தனர்.இதற்கிடையில் புரு இனத்தைச் சேர்ந்த மற்றொரு குழு, இன்னொரு உள்ளூர் பகுதிக்குள் புகுந்து அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்தது. அதைத் தொடர்ந்து புரு இனத்தவரை தாக்கும் நோக்கத்துடன் உள்ளூர்க்காரர்கள் அவர்களது முகாம் பகுதியில் திரண்டனர்.

பாதுகாப்பு அதிகரிப்பு
உடன் விரைந்து வந்த போலீசார் வானை நோக்கிச் சுட்டு, கும்பலைக் கலைத்தனர்.போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட குழுக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். உயிர்ப்பயத்தால் வீட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. கலவர பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பதற்றம் நீடித்துவருகிறது.

Next Story