5 நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகை


5 நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகை
x
தினத்தந்தி 28 July 2021 4:53 AM GMT (Updated: 28 July 2021 4:53 AM GMT)

ஆகஸ்ட் 2-ம் தேதி வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

புதுடெல்லி

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரின் கருணாநிதியின் நினைவு தினமான ஆகஸ்ட் 7 ஆம் தேதி வருகிறது. அப்போது சட்டசபையில் கருணாநிதியின் உருவ படத்தை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கருணாநிதியின் படத்திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க கடந்த  19-ம் தேதி டெல்லி சென்றார். அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளின் போது அவரது படத்திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழ்நாட்டிற்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆகஸ்ட் 2-ம் தேதி வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் ஜனாதிபதி நண்பகல் 12.45-க்கு சென்னை வந்தடைவார். மாலை 5 மணிக்கு நடைபெறும் சட்டசபை நூற்றாண்டு விழாவில் ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார்.

பின்னர்  நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி அதிகாரிகள் பயிற்சி மையத்தில் வருகிற 4-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வருகிற 3-ந் தேதி ஊட்டிக்கு வருகிறார். 

பின்னர் அவர் ராஜ்பவனில் தங்குகிறார். தொடர்ந்து 5-ந் தேதி ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார். ஜனாதிபதி வருகையையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Next Story