மத்திய மந்திரிக்கு எதிராக காங்கிரஸ் அளித்த உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து பரிசீலனை: வெங்கையா நாயுடு


மத்திய மந்திரிக்கு எதிராக காங்கிரஸ் அளித்த உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து பரிசீலனை: வெங்கையா நாயுடு
x
தினத்தந்தி 30 July 2021 11:47 PM GMT (Updated: 30 July 2021 11:47 PM GMT)

ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என தெரிவித்த கருத்துக்காக மத்திய சுகாதார இணை மந்திரிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்து உள்ளது. இது பரிசீலனையில் இருப்பதாக வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை?
கொரோனா 2-வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக யாரும் இறக்கவில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்த நிலையில் மேற்படி கருத்துகளின் மூலம் அவையை தவறாக வழிநடத்தியதற்காக மத்திய சுகாதார இணை மந்திரி பாரதி பிரவின் பவாருக்கு எதிராக மாநிலங்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அளித்து உள்ளது.

கே.சி.வேணுகோபால்
இந்த நோட்டீசை அளித்த மாநிலங்களவை உறுப்பினர் கே.சி.வேணுகோபால் நேற்று இது குறித்து அவையில் கேள்வி எழுப்பினார்.காலையில் அவை தொடங்கியதும் இந்த விவகாரத்தை எழுப்பி அவர் கூறும்போது, ‘எனது கேள்வி நேரடியானது. அதாவது கொரோனா 2-வது அலையின்போது ஏராளமான நோயாளிகள் சாலைகளிலும், ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்தார்களா? என்பதுதான். ஆனால் எந்த நோயாளியும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை என மந்திரி கூறியுள்ளார்’ என்று தெரிவித்தார்.

மந்திரியிடம் விளக்கம் கேட்கப்படும்
இதற்கு மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு பதிலளிக்கையில், ‘இந்த விவகாரத்தில் அளிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் கிடைத்தது. அது பரிசீலனையில் இருக்கிறது’ என்று தெரிவித்தார். இந்த நோட்டீசை சம்பந்தப்பட்ட மந்திரிக்கு அனுப்ப முடிவு செய்தால், பிரச்சினை தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்படும் எனக்கூறிய வெங்கையா நாயுடு, இது தொடர்பான பணிகள் நடந்து வருவதாகவும், அது ஒரு நடைமுறை என்றும் தெரிவித்தார்.

விதி எண் 267
இதைப்போல அவை விதி எண் 267-ன் கீழ் வழங்கப்படும் (ஒத்திவைப்பு தீர்மானம்) நோட்டீஸ்கள் கடந்த 2016-ம் ஆண்டுக்குப்பிறகு விவாதத்துக்கு எடுக்கவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான சுகேந்து சேகர் ராய் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த வெங்கையா நாயுடு, ‘இது குறித்தும் நாம் விவாதிக்க வேண்டும். ஏனெனில் கடந்த காலங்களில் எப்போதாவதுதான் விதி எண் 267 பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து தினமும் 10 முதல் 15 நோட்டீஸ்கள் வரை வருகின்றன. அவற்றுக்காக அவையை ஒத்தி வைத்தால், ஒத்தி வைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஆனால் அவையும் நடத்தி, பிரச்சினைகளும் விவாதிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்’ என்று தெரிவித்தார்.

Next Story