மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி பெற தேவை இல்லை - பிரதாப் சிம்ஹா எம்.பி.


மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி பெற தேவை இல்லை - பிரதாப் சிம்ஹா எம்.பி.
x
தினத்தந்தி 1 Aug 2021 10:08 PM GMT (Updated: 1 Aug 2021 10:08 PM GMT)

மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி பெற தேவை இல்லை என்று பிரதாப் சிம்ஹா எம்.பி. கூறியுள்ளார்.

மைசூரு, 

ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. ஆனால் இதற்கு தமிழக அரசும், தமிழக விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஆனாலும் மேகதாதுவில் அணை கட்டப்படுவது உறுதி என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசை கண்டித்து வருகிற 6-ந் தேதி தமிழக பா.ஜனதா சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அண்ணாமலை கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் ஆவார். அண்ணாமலையின் உண்ணாவிரத போராட்ட அறிவிப்பு குறித்து மைசூரு-குடகு தொகுதி பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளிக்கையில் கூறியதாவது:-

மேகதாது விஷயத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக அண்ணாமலை உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார். அவர் நடத்த உள்ள உண்ணாவிரத போராட்டம் குறித்து விவாதிப்பது தேவையில்லாத ஒன்று.

மேகதாதுவில் அணை கட்ட வரைவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அணை கட்டும் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி பெற தேவை இல்லை. அடுத்த மாநிலத்தின் அனுமதி கேட்பது, கடிதம் எழுவது, அடுத்த மாநிலத்தை பற்றி நாம் குறை கூறுவது சரியானது அல்ல. நமது மாநிலத்திற்கு வேண்டிய பணிகளை நாமே செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story