ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம்: பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து


ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம்: பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
x
தினத்தந்தி 5 Aug 2021 4:03 AM GMT (Updated: 5 Aug 2021 4:03 AM GMT)

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்த இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு நாடு முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

புதுடெல்லி,

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்ட இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியது.

இந்திய ஆண்கள் ஆக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்ஸ் பதக்கம் வென்றதன் மூலம் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது.

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் மூன்றாவது ஆக்கி வெண்கலப் பதக்கம் இதுவாகும். இந்திய தேசிய விளையாட்டான ஆக்கியில் 1980 ஆம் ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்று வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது இந்திய ஆடவர் ஹாக்கி அணி. இந்திய ஹாக்கி மற்றும் இந்திய விளையாட்டுகளுக்கான பொன்னான தருணம் இது.

வெண்கலம் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஆடவர் ஆக்கி அணி 12-வது பதக்கத்தை கைப்பற்றி உள்ளது. கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஆக்கி அணி தங்கம் வென்றிருந்தது.
இந்திய ஆடவர் ஆக்கி அணி ஒலிம்பிக் வரலாற்றில் 8 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் வென்றுள்ளது.

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்த இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்திய ஆக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

வரலாற்று! ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் நாள். வெண்கலத்தை வீட்டிற்கு கொண்டு வந்த எங்கள் ஆண்கள் ஆக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த நாட்டின்  குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் நிறைவேற்றி உள்ளனர்.
 எங்கள் ஆக்கி அணியை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது என கூறியுள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்திய ஆக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்திய ஆடவர் ஆக்கி அணி பெற்ற வெற்றி ஆக்கியில் புதிய சகாப்தத்தை உருவாக்கி உள்ளது. விளையாட்டில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய அணியின் வெற்றி உந்து சக்தியாக இருக்கும் என்றார்.

Next Story