பண்டிகை காலங்களில் நாம் கைத்தறி ஆடைகளை வாங்க வேண்டும் - பிரதமர் மோடி


பண்டிகை காலங்களில் நாம் கைத்தறி ஆடைகளை வாங்க வேண்டும் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 7 Aug 2021 8:50 AM GMT (Updated: 7 Aug 2021 8:50 AM GMT)

கைத்தறி தொழிலாளர்களை ஊக்குவிக்க, பண்டிகை காலங்களில் நாம் கைத்தறி ஆடைகளை வாங்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய பிரதேசத்தில் பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

துரதிர்ஷ்டவசமாக மத்திய பிரதேசத்தில் அதிகமான மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டு உள்ளன. மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த துயரமான நேரத்தில், மத்திய அரசும் நாட்டு மக்களும் மாநிலத்துடன் துணை நிற்கிறது. 

முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அமைச்சரவை சகாக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சூழ்நிலையில் மாநில அரசுக்கு உதவ என்டிஆர்எப், விமானப்படை மற்றும் மத்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

கொரோனாவினால் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பதற்கான நடவடிக்கை மற்றும் நிலைப்பாடுகளில் ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 

பிரதமர் கரீப் கல்யாண் ரோஜர் யோஜனா, பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டமாக இருந்தாலும் சரி, முதல்நாளில் இருந்து ஏழைகளுக்கு உணவு மற்றும் வேலைவாய்ப்பு அளிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

கொரோனா காலகட்டத்தில், 80 கோடி பேருக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன. கோதுமை, அரிசி மற்றும் பருப்புகள் மட்டுமல்லாமல், ஊரடங்கு காலத்தில் 8 கோடி குடும்பங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. 20 கோடிக்கும் அதிமான பெண்களுக்கு, ரூ.30 ஆயிரம் கோடி பணத்தை அவர்களின் ஜன்தன் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது.  கைத்தறி தொழிலாளர்களை ஊக்குவிக்க, பண்டிகை காலங்களில் நாம் கைத்தறி ஆடைகளை வாங்க வேண்டும்.

மத்திய பிரதேசத்தில் சாலைகளின் நிலை எப்படி இருந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் இங்கிருந்து பெரிய மோசடிகளைப் பற்றி கேள்விப்பட்டோம். இன்று, எம்பியில் உள்ள நகரங்கள் தூய்மை மற்றும் வளர்ச்சிக்கு புதிய மாதிரிகளை உருவாக்கி இருக்கின்றன. 

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story