நாடு முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி மத்திய அரசு தகவல்


நாடு முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 11 Aug 2021 4:15 AM GMT (Updated: 11 Aug 2021 4:15 AM GMT)

நாடு முழுவதும் கடந்த 4-ந் தேதி வரை 3 லட்சத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கொரோனா தொடர்பான உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பரத் பிரவின் பவார் எழுத்து மூலம் பதில் அளித்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:-

நாடு முழுவதும் கடந்த 4-ந் தேதி வரை 3,05,482 கர்ப்பிணிகளுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் 456 பேர் இரு டோஸ்களும் போட்டு விட்டனர். இதைப்போல திருநங்கைகளுக்கு 91,104 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் 77,457 பேர் முதல் டோசும், 13,647 பேர் 2-வது டோசும் போட்டு உள்ளனர்.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் தடுப்பூசி போடப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3-வது அலையில் இருந்து மக்களை பாதுகாக்க சுகாதார அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமாக, தொற்றின் போக்கு குறித்து மாவட்ட அளவிலேயே கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

இதைத்தவிர கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழக்கும் சுகாதாரத்துறை ஊழியர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

அந்தவகையில் கடந்த 5-ந் தேதி வரை 1,016 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு இருக்கிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் திரும்பப்பெற்றதும், தகுதியற்றவையுமாக 276 உரிமை கோரல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.

மேலும் 111 உரிமை கோரல்கள், முழுமையற்ற ஆவணங்கள் அல்லது தாமதமான நடவடிக்கை போன்ற காரணங்களுக்காக நிலுவையில் இருக்கின்றன.

இவ்வாறு பரத் பிரவின் பவார் கூறினார்.

கொரோனா தொற்று ஏற்பட்டதால் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு பொதுத்துறை வங்கிகள் கடனுதவி (கொரோனா கடன்) வழங்கி வருகின்றன. இது பற்றிய விவரங்களை மாநிலங்களவையில் நேற்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் எழுத்து மூலம் பதில் அளித்து இருந்தார்.

அதில் அவர், ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த பிணையற்ற கடன் வசதியை பெற தகுதியுடையவர்கள் ஆவர். இந்த கடனை 3 முதல் 5 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தலாம். மேலும் முதல் தவணை திருப்பி செலுத்துவதற்கான தடை காலமும், 3 முதல் ஆறு மாதங்கள் வரை ஆகும்’ என கூறியிருந்தார்.

இந்த திட்டத்தின் கீழ் கடந்த மாதம் வரை 1.33 லட்சம் பேருக்கு கொரோனா கடன் வழங்கப்பட்டிருப்பதாக கூறிய நிர்மலா சீதாராமன், இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 33,917 பேருக்கும், கர்நாடகாவில் 20,391 பேருக்கும் கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

Next Story