பருவநிலை மாற்றம்: இந்தியாவின் சென்னை உள்பட கடலோர நகரங்கள் 3 அடி மூழ்கும் -கடும் எச்சரிக்கை


பருவநிலை மாற்றம்: இந்தியாவின் சென்னை உள்பட கடலோர நகரங்கள் 3 அடி  மூழ்கும் -கடும் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 Aug 2021 10:36 AM GMT (Updated: 11 Aug 2021 10:36 AM GMT)

இந்த நூற்றாண்டின் இறுதியில் கடல் மட்டம் மிகவும் ஆபத்தான அளவில் உயர்ந்து நாட்டின் 12 கடலோர நகரங்களை மூழ்கடிக்கும் என காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுக்குழு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

புதுடெல்லி

பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வுக்குழு  (ஐபிசிசி) வின் புதிய அறிக்கை, இந்தியாவுக்கு கடுமையான எச்சரிக்கைகளைக் கொடுத்துள்ளது. ஐபிசிசி 1988 முதல் ஒவ்வொரு ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை  பூமியின் காலநிலை பற்றிய உலகளாவிய மதிப்பீடுகளை வழங்கி வருகிறது. 

இந்த நூற்றாண்டின் இறுதியில்  கடல் மட்டம் மிகவும் ஆபத்தான அளவில் உயர்ந்து நாட்டின் 12 கடலோர நகரங்களை மூழ்கடிக்கும். இந்த நகரங்களில் மும்பை, சென்னை, கொச்சி மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவை அடங்கும். இந்த நகரங்கள் கிட்டத்தட்ட மூன்று அடி நீருக்கடியில் மூழ்கும் என எச்சரித்து உள்ளது.

உலகெங்கிலும் உள்ள கடல் மட்டங்களில் ஏற்படும் மாற்றங்களை மதிப்பிடுவதற்கு நாசாவின் பகுப்பாய்வை ஐபிசிசி பயன்படுத்தி உள்ளது. 

ஐபிசிசி அறிக்கை ஆசியாவைச் சுற்றியுள்ள கடல் மட்டம் சராசரி உலகளாவிய விகிதத்தை விட வேகமாக அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை காணப்பட்ட கடல் மட்டங்களில் தீவிர மாற்றங்கள், 2050 க்குள் ஆறு முதல் ஒன்பது வருடங்களுக்கு ஒருமுறை நிகழலாம் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் கடல் மட்டம் உயரும் நகரங்கள்:

காண்ட்லா: 1.87 அடி
ஓகா: 1.96 அடி
பவுநகர்: 2.70 அடி
மும்பை: 1.90 அடி
மோர்முகாவோ: 2.06 அடி
மங்களூர்: 1.87 அடி
கொச்சி: 2.32 அடி
பரதீப்: 1.93 அடி
கிதிர்பூர்: 0.49 அடி
விசாகப்பட்டினம்: 1.77 அடி
சென்னை: 1.87 அடி
தூத்துக்குடி: 1.9 அடி

Next Story