இமாசல பிரதேச நிலச்சரிவுக்கு பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு; நேரில் பார்வையிட்ட முதல் மந்திரி


இமாசல பிரதேச நிலச்சரிவுக்கு பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு; நேரில் பார்வையிட்ட முதல் மந்திரி
x
தினத்தந்தி 12 Aug 2021 8:10 AM GMT (Updated: 12 Aug 2021 8:10 AM GMT)

இமாசல பிரதேசத்தில் 13 பேரை பலி கொண்ட நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் வான்வழியே மற்றும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

கின்னார்,

இமாசலபிரதேச மாநிலம் கின்னார் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. ராம்பூர்-ஜூரி பகுதியில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால், மலைப்பகுதியில் உள்ள பாறைகள் உருண்டு சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் மீது விழுந்தது. மேலும், மண்சரிவு ஏற்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீதும் விழுந்தது.   

இந்த நிலச்சரிவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் மற்றும் கார் சிக்கிக்கொண்டன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மற்றும் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் மீட்புபணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், பஸ்சில் 25- 30 பேர் இருந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். டிரைவர் உட்பட 14 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  10 பேர் உயிரிழந்துள்ளனர்.  சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு இந்தோ திபெத்திய எல்லை போலீசாரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் எதிரொலியாக, பிரதமர் மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும், மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குரை தொடர்பு கொண்டு தேவையான உதவிகள் செய்வதாக தெரிவித்து உள்ளனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இமாசல பிரதேச நிலச்சரிவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்து உள்ளது.  அவர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டு உள்ளன.

கின்னார் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் இன்று காலை வான்வழியே சென்று பார்வையிட்டுள்ளார்.  இதன்பின்பு தரைவழியேயும் அவர் சென்று சம்பவம் நடந்தது பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்து உள்ளார்.


Next Story