குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி 2022-ம் ஆண்டு தொடங்கும் என தகவல்


குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி 2022-ம் ஆண்டு தொடங்கும் என தகவல்
x
தினத்தந்தி 14 Aug 2021 8:02 PM GMT (Updated: 2021-08-15T01:32:35+05:30)

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி 2022-ம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது தொற்று முடிவுக்கு வரவில்லை. அதற்குள் 3-வது அலை குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த அலையானது குழந்தைகளை அதிகளவில் தாக்கக்கூடும் என பரவலாக தகவல்கள் வெளியாகி வந்தன.

12-15 வயது பிரிவு குழந்தைகளுக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தடுப்பூசி பயன்பாட்டில் வந்து விட்டது. ஆனால் நமது நாட்டில் அவர்களுக்கு தடுப்பூசி இன்னும் வரவில்லை. இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிரான பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“கொரோனா நோயால் தூண்டப்பட்ட சிக்கல்களை கொண்டுள்ள (ஆபத்தில் உள்ள) குழந்தைகளுக்கு முதலில் தடுப்பூசி போடவேண்டும் என்று தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு பரிந்துரைக்கும். எங்கள் முதன்மையான பணி, வயது வந்தோருக்கு தடுப்பூசி போடுவதுதான். அதன்பின்னர்தான் நாங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவோம்.

நமதுநாட்டில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 40 கோடி ஆகும். அவர்களில் 20 லட்சம் பேர் இணைநோய் உடையவர்கள். அவர்களில் நோய் எதிர்ப்பு குறைபாடு கோளாறுகள் உடையவர்கள், புற்று நோய் பாதித்தவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் அடங்குவார்கள். அவர்கள் அனைவரையும் அடையாளம் காண்போம்.

அவர்களின் பிரச்சினை அரசிடம் எடுத்து வைக்கப்படும். அவர்களுக்கு முதலில் தடுப்பூசி போட பரிந்துரைக்கப்படும். அனேகமாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி 2022-ம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கும். அதாவது, வயது வந்த அனைவருக்கும் தடுப்பூசி போட்ட பின்னர் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது தொடங்கப்படும்.”

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story