ஒரே நாளில் 64 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்களிடம் ஆர்வம் அதிகரிப்பு


ஒரே நாளில் 64 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்களிடம் ஆர்வம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 15 Aug 2021 4:53 AM GMT (Updated: 2021-08-15T10:23:20+05:30)

இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் மத்தியில் ஆர்வம் பெருகி வருகிறது. நேற்று ஒரே நாளில் சுமார் 64 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

புதுடெல்லி,

கொரோனாவுக்கு எதிரான வலிமையான பேராயுதம் தடுப்பூசிதான் என்பது உலகளாவிய கருத்தாக இருந்து வருகிறது.

இதை இந்திய மக்களும் புரிந்துகொண்டு, தயக்கத்தை உதறித்தள்ளிவிட்டு தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாளுக்கு நாள் ஆர்வம் அதிகரித்து வருகிறது. முகாம்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இதனால் தடுப்பூசி போடுவது வேகம் எடுக்கிறது.

முதலில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டாலும் கடந்த ஜூன் மாதம் 21-ந்தேதி முதல் 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

நேற்று காலை 7 மணியுடன் முடிந்த ஒரே நாளில் 63 லட்சத்து 80 ஆயிரத்து 937 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 50 லட்சத்து 31 ஆயிரத்து 693 பேர் முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்கள். 2-வது டோஸ் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 49 ஆயிரத்து 244 ஆகும்.

இதுவரையில் இந்தியாவில் 53 கோடியே 61 லட்சத்து 89 ஆயிரத்து 903 பேர் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டு பாதுகாப்பை தேடிக்கொண்டுள்ளனர்.

இவர்களில் ஒரு டோஸ் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 68 லட்சத்து 46 ஆயிரத்து 115 ஆகும்.

2 டோசும் போட்டுக்கொண்டவர்கள் 11 கோடியே 93 லட்சத்து 43 ஆயிரத்து 788 பேர்.

இந்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Next Story