வெளியேற விரும்பும் ஆப்கன் மக்களை தலீபான்கள் தடுக்கக் கூடாது - 60க்கும் மேற்பட்ட நாடுகள் வலியுறுத்தல்


வெளியேற விரும்பும் ஆப்கன் மக்களை தலீபான்கள் தடுக்கக் கூடாது - 60க்கும் மேற்பட்ட நாடுகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Aug 2021 2:42 AM GMT (Updated: 2021-08-16T08:12:42+05:30)

ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் சென்றதை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு அமைய உள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளிக்க மாட்டோம் என தலீபான்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை திரும்ப பெற அமெரிக்கா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்புக்கொண்டது. அதன்படி கடந்த ஜூன் மாத பிற்பகுதியில் இருந்து அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. 90 சதவீத அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், இதுவரை பதுங்கியிருந்த தலீபான்கள் பாய தொடங்கிினர்.

அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய சில வாரங்களிலேயே ஆப்கானிஸ்தானின் பல்வேறு முக்கிய நகரங்களையும், அண்டை நாடுகளுடனான எல்லை பகுதிகளையும் தலீபான்கள் கைப்பற்றினர். அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களில் ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்களின் தலைநகரங்களை தலீபான்கள் தங்கள் வசம் ஆக்கினார்.

தலீபான்கள் இதே வேகத்தில் முன்னேறினால் விரைவில் அவர்கள் தலைநகர் காபூலை கைப்பற்ற கூடும் என்ற அச்சம் நிலவி வந்த நிலையில், நேற்று தலீபான்கள் காபூல் நகருக்குள் நுழைந்தனர். எனினும் படை பலத்தை பயன்படுத்தி காபூலை கைப்பற்ற விரும்பவில்லை என தெரிவித்த தலீபான்கள் அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும் கூறினர்.

அதன்பின்னர் காபூல் நகரம் தங்கள் வசமானதை தொடர்ந்து, வன்முறையை உடனடியாக நிறுத்தும்படி போராளிகளுக்கு தலீபான் அமைப்பு உத்தரவு பிறப்பித்தது. ஆப்கான் ராணுவ வீரர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

விமான நிலையங்கள், மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும் என்றும், அவற்றுக்கான வினியோகம் நிறுத்தப்படாது என்றும் தலீபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்தது‌.

அதேபோல் வெளிநாட்டவர்கள் விரும்பினால் காபூலை விட்டு வெளியேறலாம் அல்லது அவர்கள் தொடர்ந்து காபூலில் இருக்க வேண்டுமெனில் தங்களை தலீபான் அதிகாரிகளிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தலீபான்கள் அறிவித்தனர்.

எனினும் காபூலை தலீபான்கள் கைப்பற்றியதால் பீதியடைந்த உள்ளூர் அரசு அதிகாரிகள் அனைவரும் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்காக விமான நிலையங்களில் குவிந்துள்ளனர். அதேபோல் காபூல் நகரை சேர்ந்த பொதுமக்களும் உயிருக்கு பயந்து அண்டைநாடான பாகிஸ்தானை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அந்நாட்டு மக்களையும், வெளிநாட்டவர்களையும் செல்வதற்கு எந்த இடையூறும் இன்றி அனுமதிக்க வேண்டும் என அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட 60 நாடுகள் வலியுறுத்தியுள்ளன. சாலைகள், விமான நிலையங்கள் என அனைத்து வகையான போக்குவரத்து பாதைகளும் தொடர்ந்து திறந்தே இருக்க வேண்டும் என்றும் அந்த நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.

Next Story