ராகுல்காந்தி கேரளாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணம்


ராகுல்காந்தி கேரளாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 16 Aug 2021 10:47 AM GMT (Updated: 2021-08-16T16:17:31+05:30)

கேரளாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, வயநாட்டில் காந்தி சிலையை திறந்து வைத்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி ஆக உள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் இப்பகுதியில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி பல்வேறு நலதிட்டங்களை தொடங்கி வைக்க தற்போது 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று காலை ராகுல் காந்தி கேரளா வந்தடைந்தார். கோழிக்கோடு விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 இதனையடுத்து ராகுல்காந்தி வயநாட்டில் மானந்தவாடி காந்தி பூங்காவில் சிற்பி கே.கே.ஆர்.வெங்கராவால் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கை சிலையை திறந்து வைத்தார்.

அதன் பின் பேசிய அவர், மகாத்மா காந்தி பற்றிய சக்தி வாய்ந்த விஷயம் என்னவென்றால் அவர் எதை சொன்னாலும் செயல்படுத்தி விடுவார். இந்தியா ஒரு சகிப்புத்தன்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என அவர் சொன்னதுடன் மட்டுமல்லாமல், அவர் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டார். மேலும் பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் எனக் கூறிய அவர் பெண்களை மரியாதையுடன் நடத்தினார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகுதியான வயநாட்டில் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது என தெரிவித்தார்.

Next Story