பொருளாதாரத்தை மேம்படுத்தவே தளர்வுகள், மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்: உத்தவ் தாக்கரே


பொருளாதாரத்தை மேம்படுத்தவே தளர்வுகள், மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்: உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 22 Aug 2021 3:48 AM GMT (Updated: 22 Aug 2021 3:48 AM GMT)

பொருளாதாரத்தை மேம்படுத்தவே தளர்வுகள் செய்யப்பட்டு இருப்பதால் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.

மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா 2-வது அலை உச்சத்தை தொட்டது. தினந்தோறும் 60 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

குழந்தைகள் சிகிச்சை மையம்
அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது. இதையடுத்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதேபோல பாதிப்பு குறைந்ததால், பொதுமக்களிடமும் அலட்சியம் ஏற்பட்டுள்ளது. சிலர் முககவசம் கூட அணியாமல் வெளியில் சுற்றி வருகின்றனர்.இதன் மூலம் 3-வது அலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. 3-வது அலை வந்தால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்ற கணிப்பும் உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் கலினாவில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த சிகிச்சை மையத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்
மராட்டியத்தில் கொரோனா தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை. பொருளாதார சுழற்சியை கவனத்தில் கொண்டே கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். பொதுமக்கள் தங்களது உயிருக்கும், சுற்றி இருப்பவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் பொறியில் சிக்கிவிடக்கூடாது. அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.தினசரி கொரோனா பாதிப்பு, உயிரிழப்புகள் குறைந்து வருகிறது. 3-வது கொரோனா அலை சிறுவர்களை பாதிக்கும் என வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர். எனவே அரசு குழந்தைகள் கொரோனா பணிக்குழுவை அமைத்து, வைரஸ் பற்றி சரியான தகவல்களை பெற மரபணு சோதனை ஆய்வகத்தையும் அமைத்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய கொரோனா பாதிப்பு
இதற்கிடையே மராட்டியத்தில் புதிதாக 2 லட்சத்து 2 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வந்த நிலையில், 4 ஆயிரத்து 575 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.இதன் மூலம் மாநிலத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 64 லட்சத்து 20 ஆயிரத்து 510 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்பு சற்று குறைவாகவே இருந்தபோதிலும், சாவு எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. அதாவது ஒரே நாளில் 145 பேர் உயிரிழந்தனர். இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரத்து 817 பேர் பலியாகி உள்ளனர்.

நோய் தொற்றில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 914 பேர் விடுபட்டு உள்ளனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62 லட்சத்து 27 ஆயிரத்து 219 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 53 ஆயிரத்து 967 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மும்பை, புனே
மும்பையில் நேற்று புதிதாக 259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். நகரில் இதுவரை 7 லட்சத்து 40 ஆயிரத்து 871 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 946 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் தொற்று பாதித்தவர்களில் 97 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 2 ஆயிரத்து 23 நாட்களாக உள்ளது. புனே நகரில் புதிதாக 538 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 10 பேர் உயிரிழந்து உள்ளனர். நந்துர்பர் மாவட்டத்தில் தொடர்ந்து 6-து நாளாக கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story