தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்தால் இந்தியா வல்லரசாக முடியும் - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்


தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்தால் இந்தியா வல்லரசாக முடியும் - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 27 Aug 2021 9:26 PM GMT (Updated: 27 Aug 2021 9:26 PM GMT)

தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்தால் இந்தியா வல்லரசாக முடியும் என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

புனே, 

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (டி.ஆர்.டி.ஓ.) சொந்தமாக புனேயில் உள்ள ராணுவ உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றும்போது கூறியதாவது:-

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பின் வளர்ச்சிப்பாதையில் நாட்டை கொண்டு செல்ல பிரதமர் மோடி உறுதிபூண்டுள்ளார். ஆயுதப்படைகள், தொழில் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சிகள் மூலம் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் முன்னேற்றம் அடைய பாதுகாப்பு அமைச்சகத்தால் சில முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது பரஸ்பர புரிதல் மற்றும் அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

புதிய திறமைகளை ஈர்க்கவும் மற்றும் பாதுகாப்பு அனுபவத்தைப் பெற்றிருப்பதால் ஆயுதப்படை வீரர்களிடமிருந்து கள அனுபவத்தையும், உள்ளீடுகளையும் பெறவும் பாதுகாப்பு அமைச்சகம் “ஐடெக்ஸ்" (பாதுகாப்பு சிறப்பிற்கான கண்டுபிடிப்பு) என்ற புதிய தளத்தை உருவாக்கி உள்ளது.

இதற்காக மத்திய அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளது. மேலும் 300 ஸ்டார்ட்அப் திட்டங்களை ஆதரிப்பதன் மூலம் விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதற்காக அரசு ரூ.500 கோடியும் ஒதுக்கியுள்ளது.

தனியார் நிறுவனம் உருவாக்கிய ஒரு லட்சம் கையெறி குண்டுகள் சமீபத்தில் வெற்றிகரமாக ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்த நிறுவனம் இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு இந்த குண்டுகளை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்கிறது.

அந்தவகையில் இந்திய ராணுவத்துக்கு ஒரு குண்டு, ரூ.3,400 என்ற விலையிலும், இந்தோனேஷியாவுக்கு ரூ.7 ஆயிரத்துக்கும் வழங்கப்படுகிறது. இப்படி நாம் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்தால், இந்தியா வல்லரசாக முடியும் என்பதுதான் எனது கருத்து. அத்துடன் பொருளாதார வல்லரசாகவும் முடியும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

Next Story