சிறுமியை காரினுள் வைத்து பூட்டி சென்ற போலீசார்...! நடவடிக்கை பாயுமா...?


சிறுமியை காரினுள் வைத்து பூட்டி சென்ற போலீசார்...!  நடவடிக்கை பாயுமா...?
x
தினத்தந்தி 3 Sep 2021 8:59 AM GMT (Updated: 3 Sep 2021 9:36 AM GMT)

கேரளாவில் காரினுள் வைத்து சிறுமியை போலீசார் பூட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிலையில் தற்போது தம்பதி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

திருவனந்தபுரம்

கேரள  திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரத்தில், மூன்று வயது சிறுமியை காரில் அடைத்து வைத்ததாகவும், சிறுமி தேம்பித்தேம்பி அழுதபோதும் போலீசார் கண்டுகொள்ளாமல் சாவியை எடுத்துக்கொண்டு போனதாகவும் புகார் ஒன்று கிளம்பியுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி பாலராமபுரத்தில் சிபு என்பவர் தனது மனைவி, மூன்று வயது மகளுடன் காரில் சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக சென்றதாக சிபுவின் காரை போலீசார் மடக்கினர்.

அதிவேகமாக வந்ததற்காக 1,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அந்த அபராத தொகையை செலுத்திய சிபு, நிறைய கார்கள் அதிவேகமாக செல்கிறதே அதையெல்லாம் ஏன் மடக்கிப் பிடிக்கவில்லை? என கேட்டுள்ளார்.

 இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் சிபுவின் காரை பூட்டி சாவியை எடுத்துள்ளனர். சிபுவும் அவரது மனைவி அஞ்சனாவும் காருக்கு வெளியே நின்ற நிலையில் அப்போது சிபுவின் மூன்று வயது குழந்தை மட்டும் காருக்குள் இருந்து உள்ளார். அந்த சமயத்தில் காருக்குள் தனியாக இருந்த குழந்தை  அழுதது. குழந்தை அழுவது பற்றி சிபு கூறியும், அதை கண்டுகொள்ளாத போலீசார் கார் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளதாக கூறினர். இதையடுத்து குழந்தை காருக்குள் கத்தி அழுவதை தாய் அஞ்சனா வீடியோ எடுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் சிபு போலீசாரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்ய முயன்றனர். ஆனால் சாலையில் சென்ற பயணிகள் அங்கு கூடி நியாயம் கேட்டதால் போலீசார் அவர்களை விடுவித்துவிட்டுச் சென்றனர். குழந்தை அழும் வீடியோவை வெளியிட்ட சிபு கூறுகையில், 

நான் போலீசாருக்கு பயந்து இதுவரை எதுவும் செய்யாமல் இருந்தேன். ஆற்றிங்கல் பகுதியில் பெண் சிவில் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தது ஊடகங்களில்  வெளியானதால் தைரியமாக வீடியோவை வெளியிட்டேன்" என்றார். 

பாலராமபுரம் போலீஸ் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும் என போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Next Story