சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 7 Sep 2021 10:17 AM GMT (Updated: 7 Sep 2021 10:17 AM GMT)

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது.



புதுடெல்லி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசார் நடத்திய தாக்குதலால் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன், தாமஸ் பிரான்சிஸ் உள்பட 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை, கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். மீதமுள்ள 9 பேரும் சிறையில் உள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை கேரளாவுக்கு மாற்ற கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக பதிலளிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் 24ந்தேதி உத்தரவிட்டது.

இதற்கிடையில், இந்த கொலை வழக்கு விசாரணையை கேரளாவுக்கு மாற்றக்கூடாது என தெரிவித்து மறைந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி இடையீட்டு மனு தாக்கல் செய்தார். எதிர்மனுதாரராக சேர்க்க கோரிய செல்வராணியின் மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் 16ந்தேதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய கோடைகால அமர்வு முன் கடந்த ஜூனில் மீண்டும் நடைபெற்றது.

தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.நரசிம்மா, வக்கீல் டி.குமணன் ஆஜராகி, தமிழகத்தில் புதிய அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க ஆலோசனை பெற வேண்டி உள்ளது. எனவே 2 வார காலம் அவகாசம் வேண்டும் என வாதிட்டனர்.

அப்போது மனுதாரர் ரகு கணேஷ் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அஞ்சனா பிரகாஷ், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்படுகிறது. வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதிகள், சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்ததுடன், இந்த வழக்கில் அரசியல் தலையீடு இல்லை என்றும் தெரிவித்தனர். தமிழக அரசு கோரிய அவகாசத்தை அளித்து, வழக்கு விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைத்தனர்.

இதற்கிடையே, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.  அதுபோல பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை கேரளாவுக்கு மாற்ற கோரி ரகு கணேஷ் ஏற்கெனவே மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வினீத் சரண், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்து கொண்டது.  இதில், சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டு உள்ளது.


Next Story