மேற்குவங்காளம்: திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக்கொலை


மேற்குவங்காளம்: திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 7 Sep 2021 11:12 PM GMT (Updated: 7 Sep 2021 11:12 PM GMT)

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது பாஜக என திரிணாமுல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில், பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதனால், மேற்குவங்காள அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் புர்பா பிரதாமன் மாவட்டம் அஷ்கிராம் பகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி சந்ஷல் பக்‌ஷி (40) நேற்று இரவு தனது தந்தையுடன் பைக்கில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரது பைக்கை பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல் சந்ஷல் பக்‌ஷி மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச்சென்றது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி சந்ஷல் பக்‌ஷி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த சந்ஷலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் சந்ஷலை பாஜகவினர் திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்துவிட்டதாக திரிணாமுல் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

Next Story