மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி பதவியை தக்க வைப்பாரா? இடைத்தேர்தலில் போட்டியிட மம்தா வேட்புமனு தாக்கல்


மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி பதவியை தக்க வைப்பாரா? இடைத்தேர்தலில் போட்டியிட மம்தா வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 10 Sep 2021 11:14 PM GMT (Updated: 2021-09-11T04:49:00+05:30)

மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்-மந்திரி பதவியைத் தக்க வைப்பதற்காக இடைத்தேர்தலில் போட்டியிட, மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபைக்கு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக நடந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. ஆனாலும் வழக்கமாக போட்டியிட்டு வந்த பவானிப்பூர் தொகுதிக்கு பதிலாக நந்திகிராம் தொகுதிக்கு மாறி களம்கண்ட மம்தா, அங்கு அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பா.ஜ.க. வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.

ஆனாலும் மம்தா முதல்-மந்திரி பதவியை ஏற்றார். இதனால் 6 மாதங்களுக்குள் (நவம்பர் 5-ந் தேதிக்குள்) அவர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அரசியல் சாசன நெருக்கடி உள்ளது.

இடைத்தேர்தல்

இந்த நிலையில் அவர் மீண்டும் தனது பழைய தொகுதியான பவானிப்பூரில் போட்டியிட ஏதுவாக, அந்த தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான மந்திரி சோவன்தேப் சட்டோபாத்பாய், எம்.எல்.ஏ. பதவியை விட்டு விலகினார்.

இதையடுத்து அந்த தொகுதி காலியானது.

அந்த தொகுதிக்கும், ஏற்கனவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட சாம்சர்கஞ்ச் மற்றும் ஜாங்கிப்பூர் தொகுதிக்கும் சேர்த்து வரும் 30-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வேட்பு மனுதாக்கல் கடந்த 6-ந் தேதி தொடங்கியது. 13-ந் தேதி மனுதாக்கலுக்கு கடைசி நாள்.

மம்தா மனு தாக்கல்

இந்த நிலையில் பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட மம்தா நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தெற்கு கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் சர்வே கட்டிடத்துக்கு வந்தார். அவருடன் மாநில கேபினட் மந்திரி பிர்ஹாத் ஹக்கீமின் மனைவி இஸ்மத் ஹக்கீம் வந்தார்.

அங்கு மம்தா, தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பதவியைத் தக்க வைப்பாரா?

இடைத்தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் மாதம் 3-ந் தேதி நடக்கிறது.

இந்த தேர்தலில் மம்தா வெற்றி பெற்று, முதல்-மந்திரி பதவியைத் தக்க வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த தொகுதியில் மம்தாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. அதே நேரத்தில் ஸ்ரீஜிப் பிஸ்வாஸ் என்பவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிறுத்தி உள்ளது.

பா.ஜ.க. வேட்பாளர்

இந்தநிலையில் மம்தாவை எதிர்த்து களம் காணும் வேட்பாளரை பா.ஜ.க. நேற்று அறிவித்தது. மம்தாவை எதிர்த்து நிறுத்தப்பட்டிருப்பவர், 41 வயதான பெண் வக்கீல் பிரியங்கா திப்ரேவால் ஆவார்.

இவர் பயமே அறியாதவர் என சொல்லப்படுகிறது.

மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் தொடர்பாக கொல்கத்தா ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில், இவரும் ஒரு வழக்குதாரர் ஆவார்.

பா.ஜ.க. இளைஞர் அணியின் மாநில துணைத்தலைவர் பதவியையும் அவர் வகித்து வருகிறார்.

வேட்பாளர் நம்பிக்கை

வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் கூறும்போது, “மம்தா ஏற்கனவே நந்திகிராமில் தோல்வி அடைந்தார். இப்போது அவர் முதல்-மந்திரி நாற்காலியை காப்பாற்றுவதற்காக தேர்தலில் போட்டியிடுகிறார். மக்களிடம் சென்று, சட்டசபை தேர்தலுக்கு பின்னர் நடத்தப்பட்ட கொடுமைகள், சித்ரவதைகள் மற்றும் வன்முறைகள் குறித்து சொல்வேன். பவானிப்பூர் மக்கள் எனக்கு வாக்கு அளித்து அவரை தோற்கடிப்பார்கள் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.

Next Story