மேற்கு வங்காள மேம்பால புகைப்படங்களை உத்தரபிரதேச அரசு விளம்பரத்துக்கு பயன்படுத்திய பா.ஜ.க.


மேற்கு வங்காள மேம்பால புகைப்படங்களை உத்தரபிரதேச அரசு விளம்பரத்துக்கு பயன்படுத்திய பா.ஜ.க.
x
தினத்தந்தி 13 Sep 2021 1:45 PM GMT (Updated: 13 Sep 2021 1:45 PM GMT)

மேற்கு வங்காள மேம்பாலம் புகைப்படங்களை உத்தரபிரதேச அரசின் விளம்பரத்துக்கு பா.ஜ.க. பயன்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

மேற்கு வங்காளம்  கொல்கத்தாவில்  முதல்-மந்திரி  மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசு  கட்டிய மேம்பாலம் ஒன்றின்  புகைப்படங்களை தங்கள் மாநில அரசின் விளம்பரத்துக்காக உத்தரப்பிரதேச பா.ஜ.க. அரசு பயன்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள  மேம்பாலம் நகரின் மத்தியப் பகுதியையும், சால்ட் லேக் , ராஜர்ஹட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவின் அடையாளங்களாகக் கூறப்படும் மஞ்சள் டாக்சி, 5 நட்சத்திர ஓட்டல் ஆகியவற்றுக்கு அடுத்து  இந்த மேம்பாலமும் அமைந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நேற்று ஆங்கில நாளேடு ஒன்றில் இந்த மேம்பாலத்தின் புகைப்படத்தை தங்கள் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களாக சித்தரித்து விளம்பரம் வெளியிட்டு உள்ளது. இதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மேற்குவங்காள  அரசின் நகரமேம்பாட்டு வளர்ச்சித்துறை மந்திரி பிர்ஹத் ஹக்கிம் கூறும் போது,

 முதல்-மந்திரி மம்தாவின் ஆட்சியில் கொல்கத்தாவின் பெருமையாக விளங்கக்கூடிய மேம்பாலத்தின் புகைப்படங்களை உத்தரப்பிரதேச அரசு தங்கள் மாநில அரசின் சுய விளம்பரத்துக்கு பயன்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி தனது டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில் ' உத்தரப்பிரதேசத்தை மாற்றுகிறேன் என யோகி ஆதித்யாத் கூறுவதெல்லாம், மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி  மம்தா தலைமையில் கட்டப்பட்ட பாலங்களை, கட்டமைப்பு வசதிகளின் புகைப்படங்களை திருடி பயன்படுத்தி, தாங்கள் கட்டியதாக காண்பிப்பது தானா. பா.ஜ.க.வின் வலுவான மாநிலத்தில் இரட்டை எஞ்சின் மாடல் அரசு தோல்வி அடைந்துவிட்டது, அவர்களின் நிலைப்பாடு வெளிப்பட்டுவிட்டது' என விமர்சித்துள்ளார்.

திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் பார்த்தா சாட்டர்ஜி, மக்களவை எம்.பி. மவுகா மொய்த்ரா ஆகிய இருவரும் சமூக வலைத்தளத்தில் பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்த விளம்பரம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனதுபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், ' முதலில் வேலைவாய்ப்புக் குறித்து பொய்யான விளம்பரத்தை அளித்து உத்தரபிரதேச  பா.ஜ.க. அரசு சிக்கிகொண்டது. இப்போது, அவர்களின் விளம்பரத்தில் பொய்யான மேம்பாலம், தொழிற்சாலை புகைப்படங்களை வெளியிட்டது அம்பலமாகியுள்ளது.

உத்தரபிரதேச  அரசு மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவில்லை, அவர்கள் மீது அக்கறையும் இல்லை. பொய்யான விளம்பரங்களை வெளியிட்டு உரிமை கொண்டாடுகிறது என தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் உத்தரப்பிரதேச அரசு மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த நாளேட்டின் ஆன்-லைனில் இந்தப் பாலத்தின் புகைப்படங்கள் நீக்கப்பட்டன. அந்த நாளேடு அளித்த விளக்கத்தில் ' உத்தரப்பிரதேச அரசின் விளம்பரத்துக்காக எங்களின் விளம்பரத்துறை தவறான புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. தவறுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம். அனைத்து டிஜிட்டல் பதிப்பிலும் இந்தப் புகைப்படம் நீக்கப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story