மும்பை- ஐதராபாத் புல்லட் ரெயில் திட்டம் சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 27 Sep 2021 7:51 PM GMT (Updated: 27 Sep 2021 7:51 PM GMT)

மும்பை- ஐதராபாத் புல்லட் ரெயில் திட்டத்திற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு நடப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை, 
மும்பை- ஐதராபாத் புல்லட் ரெயில் திட்டத்திற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு நடப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விரிவான அறிக்கை
மும்பை- ஐதராபாத் இடையே அதிவேக புல்லட் ரெயில் திட்டம் கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தற்போது ஆய்வு பணி தொடங்கி உள்ளது. 
தேசிய அதிவேக ரெயில் கழக துணை பொது மேலாளர் என்.கே பாட்டீல் இந்த திட்டம் குறித்த விரிவான அறிக்கையை, துணை கலெக்டர் பிரசாந்த் சூரியவன்சி மற்றும் பிற அதிகாரிகள் முன்னிலையில் வெளியிட்டார். 
இந்த திட்டம் குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
விரிவான திட்ட அறிக்கை
மராட்டியம் மற்றும் தெலுங்கானா இடையே 11 ரெயில் நிலையங்கள் வழியாக செல்லும் புல்லட் ரெயில் பாதை அமைய உள்ளது.
659.76 கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த ரெயில் பாதை முழுவதும் பசுமை வழிச்சாலையாக அமைய உள்ளது. 
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. புல்லட் ரெயில் மும்பை மற்றும் ஐதராபாத் இடையேயான பயண நேரத்தை 14 மணி நேரத்தில் இருந்து வெறும் 3 மணி நேரமாக குறைக்கும். 
1,200 ஹெக்டேர் நிலம்
தானே, நவிமும்பை, லோனாவாலா, புனே, பாராமதி, பந்தர்பூர், சோலாப்பூர், குல்பர்கா, விகராபாத் மற்றும் ஐதராபாத் உள்பட 11 ரெயில் நிலையங்கள் உத்தேச திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. 
இந்த திட்டத்திற்காக தானே மாவட்டத்தில் மொத்தம் 1,200 ஹெக்டேர் நிலம் தேவைப்படும். முன்மொழியப்பட்ட ரெயில்பாதை முக்கிய விரைவுசாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், பசுமை நிறைந்த பகுதிகள், பல்வேறு நகரத்தின் பிரதான சாலைகள் கடந்து செல்ல உள்ளது. 
இந்த திட்டத்திற்கு தேவைப்படும் நில ஆய்வுக்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Next Story