பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் சிறப்பு பண்புகள் கொண்ட 35 பயிர்வகைகளை மோடி அறிமுகப்படுத்தினார்


பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் சிறப்பு பண்புகள் கொண்ட 35 பயிர்வகைகளை மோடி அறிமுகப்படுத்தினார்
x
தினத்தந்தி 29 Sep 2021 12:20 AM GMT (Updated: 29 Sep 2021 12:20 AM GMT)

பருவநிலை மாற்றம், ஊட்டச்சத்து பற்றாக்குறையை எதிர்கொள்ளும் சிறப்பு பண்புகள் கொண்ட 35 பயிர்வகைகளை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.

புதுடெல்லி,

சிறப்பு பண்புகள் கொண்ட 35 பயிர்வகைகளை இந்திய ளோண் ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கி இருக்கிறது. இந்த பயிர்வகைகள், பருவநிலை மாற்றம், வறட்சி, ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியவற்றை எதிர்கொள்ளக்கூடிய சிறப்பு பண்புகள் கொண்டவை.

இவற்றில், வறட்சியைதாங்கக்கூடிய கொண்டை கடலை, சோயாபீன், நோயை தடுக்கக்கூடிய அரிசி மற்றும் கோதுமை, தினை ஆகியவையும் அடங்கும்.

இந்த 35 பயிர்வகைகளை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். இதற்கான விழா, காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் அனைத்து நிலையங்களிலும், மாநில, மத்திய வேளாண் பல்கலைக்கழகங்களிலும், கிரிஷி விஞ்ஞான் கேந்திராவிலும் காணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரதமர் மோடி, வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு பசுமை வளாக விருது வழங்கினார். புதுமையான முறைகள் மூலம் விளைச்சலை பெருக்கிய விவசாயிகளுடன் உரையாடினார். இவர்களில் 2 பெண் விவசாயிகளும் அடங்குவர்.

நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

பருவநிலை மாற்றம் என்பது விவசாயத்துக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த சூழலியலுக்கும் பெரிய சவாலாக உள்ளது. மீன்வளத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனால், விவசாயிகளும், மீனவர்களும் இழப்பை சந்திக்க வேண்டி இருக்கிறது.

பருவநிலை மாற்றத்தால், புதியவகை பூச்சிகள், நோய்கள், தொற்று நோய்கள் வருகின்றன. இதனால், மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. பயிர்களும் பாதிக்கப்படுகின்றன.

இதை தவிர்க்க தீவிர ஆராய்ச்சி தொடர்ந்து நடக்க வேண்டும். விஞ்ஞானம், அரசு, சமூகம் ஆகியவை கைகோர்த்து செயல்பட்டால், நல்ல விளைவுகள் ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story